

கஜா புயலால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலான நிலையில் தங்கள் வீட்டுக்கு மின்சாரம் வழங்கப்படாததைக் கண்டித்து பேரக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த வயதான தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சங்கரனார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(65). விவசாயியான இவர் மனைவி தாயம்மாள்(60), பேரக் குழந்தைகள் பவித்ரன்(6), ராஜேஸ்வரி(7) ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆறுமுகம் கையில் இருந்த பையை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் மண்ணெண்ணெய்யுடன் ஒரு கேன் இருந்தது தெரியவந்தது. போலீஸார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
அப்போது ஆறுமுகம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் ஊரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், புயலால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் எங்கள் வீட்டுக்கு மட்டும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வயதான நாங்களும், எங்களின் பேரக் குழந்தைகளும் கஷ்டப்படுகிறோம் எனவேதான், தற்கொலை செய்துகொள்வதற்காக மண்ணெண்ணெயுடன் வந்தோம் என்று கூறி கதறி அழுதார்.
இதையடுத்து, ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக போலீஸார் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, "விரைவில் உங்கள் வீட்டுக்கு மின்சாரம் வழங்கப்படும்" என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் வழங்காதது ஏன்?
இதுதொடர்பாக ஒரத்தநாடு மின்பகிர்மான வட்ட பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “கஜா புயலின்போது, ஆறுமுகத்தின் வீட்டருகே இருந்த மரம் சாய்ந்து, வீட்டில் உள்ள மின்சார மீட்டர் பெட்டியின் மீது விழுந்ததால், மீட்டர் பெட்டி சேதமடைந்துவிட்டது. இதற்கு மாற்றாக வழங்க தற்போது மின்வாரியத்தில் மீட்டர் பெட்டி இருப்பு இல்லாததால், உடனடியாக மின்சாரம் வழங்க இயலவில்லை” என தெரிவித்தார்.