Published : 14 Dec 2018 03:33 PM
Last Updated : 14 Dec 2018 03:33 PM

மெரினா கடற்கரைச்சாலையில் தாறுமாறாகச் சென்ற பேருந்து கார் மீது மோதியது: மூதாட்டி பலி, 2 பேர் படுகாயம்

சென்னை மெரினா காமராஜர் சாலையில் விதியை மீறி அதிவேகமாக மஞ்சள் கோட்டை கடந்துச் சென்ற மாநகர பேருந்து எதிரில் வந்த கார்மீது மோதியதில் மூதாட்டி பலியானார், ஓட்டுநர், சிறுமி படுகாயமடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் வாகன ஓட்டிகள் சாலையின் மையத்தில் உள்ள மஞ்சள் கோட்டை கடந்துச் செல்வதும், மாநகர பேருந்துகள் கண்டபடி தாறுமாறாக செல்வதும் அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 10-45 மணி அளவில் சென்னை கோவளத்திலிருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து தடம் எண் 109 வேகமாக வந்துக் கொண்டிருந்தது. கண்ணகி சிலையைத்தாண்டி சென்றபோது பேருந்தை வேகமாக செலுத்திய ஓட்டுநர் விதியை மீறி மஞ்சள் கோட்டை தாண்டி சாலையின் எதிர்ப்புறம் சாலையில் திடீரென பயணிக்க ஆரம்பித்தார்.

அப்போது எதிரில் வந்த கால்டாக்சி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் சிக்கிய ஓட்டுநர் வெங்கடேசன் படுகாயமடைந்தார். காரில் பயணம் செய்த மூதாட்டி ஹேமாவதி, அவரது பேத்தி  ஆனந்தவல்லி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இதில் சிகிச்சைப் பலனின்றி மூதாட்டி ஹேமாவதி மரணமடைந்தார். கார் டிரைவர் வெங்கடேசன், பேத்தி ஆனந்தவல்லி ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓட முயன்ற பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட விவிஐபிக்கள் செல்லும் சாலை என்பதால் சாயின் இடையே தடுப்புகள் இல்லை. இதனால் வாகனங்கள் சாலையின் நடுக்கோட்டை கடந்து செல்வது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

இச்சாலையில் இதுபோன்று அடிக்கடி மஞ்சள் கோட்டை கடக்கும் விதிமீறல் நிகழ்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு காயமடைதல் நடக்கிறது. இச்சாலையில் செல்லும் மாநகர பேருந்து ஓட்டுநர்கள் விதிகளை மதிப்பதே இல்லை, தாறுமாறாக பேருந்தை இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சமீபத்தில் விவேகானந்தர் இல்லம் அருகே வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பார தடுப்பில் மோதியது. அதிர்ஸ்டவசமாக அப்போது சாலையிலோ, பிளாட்பாரத்திலோ வாகன ஓட்டிகளோ, பாதசாரிகளோ இல்லாததால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் இதே காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அஜாக்கிரதையாக சாலையில் திடீரென குறுக்கே புகுந்த வாகன ஓட்டியால் இன்னொரு இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்ததில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.   

கடந்தவாரம் நீதிபதியின் வாகனம் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், பயணி இருவரும் காயமடைந்தனர். சாலையில் விஐபிக்கள் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீஸார் நிற்பதும், சாலைக்கு இடையே தற்காலிக தடுப்போ, வேகத்தடுப்போ இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் கடற்கரை காமராஜர் சாலையில் நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

விபத்துக்குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x