

‘‘பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான். ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன் அவர் சேடிஸ்ட் தான் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் பேசினார்.
திமுக எம்எல்ஏ மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே நான் பேசுகின்ற நேரத்தில் இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சேடிஸ்ட் என்று நான் சொன்னேன், அதை சொல்லலாமா சொல்லக் கூடாதா என்பது இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி இருக்கிறது, நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் கூட நான் பேசுகிற பொழுது கூட அதை நான் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேன்.
நான் சொன்னதில் என்ன தவறு, மோடி அவர்களை தனிப்பட்ட முறையில் நான் சேடிஸ்ட் என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்று சொன்னால் ஓட்டு போட்டவர்களுக்கும் அவர் தான் பிரதமர், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஓகி புயலிலே வர்தா புயலிலே இப்பொழுது நடந்து இருக்கக்கூடிய கஜா புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது,
அதுவும் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் 65 பேர்கள் மாண்டுபோய் இருக்கிறார்கள், அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா? நேரடியாக வந்து பார்க்க அவசியமில்லை, காரணம் அவருக்கு நேரமில்லை, வெளிநாடு சுற்றுவதற்கே அவருக்கு நேரம் கிடையாது, அப்படிபட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார்.
ஆனால், அதே பிரதமர் குஜராத் மாநிலத்திலோ, மஹாராஷ்டிரா மாநிலத்திலோ ஏதேனும் துயரச்செய்தி வந்தால் உடனடியாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார், இரங்கல் தெரிவிக்கிறார், ஏன் வெளிநாட்டில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் கூட, அமெரிக்காவில், அதே மாதிரி போர்ச்சுக்கலில் சில சம்பவங்கள் ஏற்பட்ட நேரத்தில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட நேரத்தில், துப்பாக்கிச் சூடு ஏற்பட்ட நேரத்தில் உடனடியாக அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிடுகிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் 65 பேர் மாண்டுபோய் இருக்கிறார்கள். இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் அங்கே விவசாயிகளின் சிரிப்பை பார்க்க, அங்கே வாழ்க்கை வளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு. அந்தளவிற்கு விவசாயம் அங்கு அழிந்து போய் இருக்கிறது. டெல்டா பகுதிகளில் ஏறக்குறைய 8 மாவட்டங்களில் இந்தக் கொடுமை நடந்து இருக்கிறது, அதை நேரடியாக பிரதமர் வந்து பார்க்க வேண்டாமா? பதினைந்து ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கிறது.
ஆனால், வழங்கி இருக்கக்கூடிய தொகை முன்னூறு கோடி ரூபாய், அதுவும் முன்னூறு கோடி ரூபாய் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் கிடையாது.
தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்துகிற, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பாஜக மோடியை அல்ல பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். “சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்” என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன்’’ என பேசினார்.