

டெல்டா மாவட்டங்களை அண்மையில் கடுமையாக தாக்கிய கஜா புயல், கொருக்கை கிராமத்தில் உள்ள அரசு கால்நடைப் பண் ணைக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ளது உம்பளச்சேரி கிராமம். இந்த கிரா மத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரிய நாட்டு மாடு இனமான உம்பளச்சேரி மாடுகள், டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பரவியுள் ளன. வனவிலங்குகளிடம் இருக்கக் கூடிய முரட்டுத்தனம் உம்பளச்சேரி மாடுகளிடமும் சற்று காணப்படும். வயல்களில் உழுவதற்கு தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேலும் சோர்வின்றி உழைக்கக் கூடியது என்பதால் உழவு மாட்டுக்கு டெல்டா விவசாயிகள் உம்பளச்சேரி இன மாடுகளையே அதிகம் விரும்பி வளர்க்கின்றனர். அதேபோல் உம் பளச்சேரி எருதுகள் சற்றும் சளைக்காமல் மிக நீண்ட தூரத்துக்கு பார வண்டிகள் இழுக் கக் கூடியவை. உம்பளச்சேரி பசுக்கள் குறை வாகத்தான் பால் தரும். எனினும், இதன் பால் மிகவும் சத்து மிகுந்தது. இவற்றையெல்லாம் விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உம்பளச்சேரி மாடுகளிடம் உண்டு. கோமாரி போன்ற கொடுமையான நோய்கள்கூட இந்த இன மாடுகளை நெருங்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல பாரம்பரிய சிறப்புகள் மிக்க உம்பளச்சேரி மாட்டு இனத்தை பாதுகாக்கும் நோக்கில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி அருகே கொருக்கை கிராமத்தில் தமிழக அரசின் கால்நடைத் துறை சார்பில் கால்நடைப் பண்ணை தொடங்கப்பட்டது. சுமார் 495 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த பண்ணையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட உம்பளச்சேரி இன மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை இந்த பண்ணை யிலிருந்து 100 மாடுகள் விற்பனை செய்யப்படு கின்றன. இங்கு மாடுகளை வாங்க அதிக போட்டி காணப்படுவதால், உம்பளச்சேரி மாடுகளை வாங்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். இந்த பதிவின் அடிப்படையில் முன்னுரிமை தரப்பட்டு மாடுகள் விற்பனை நடைபெறுகிறது.
அண்மையில் வீசிய கஜா புயல் இந்த கால்நடைப் பண்ணையையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வந்த 7 மாடுகள், 2 கன்றுகள் உட்பட 9 கால் நடைகள் புயலின்போது உயிரிழந்தன. 5 மாடு கள் கடுமையாக காயமுற்று, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாட்டு கொட்டகைகள் அனைத்தும் காற்றில் பிய்த்தெறியப்பட்டன. கால்நடைத் துறையின் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த கால்நடைப் பண்ணையின் சேதம் பற்றி ஆய்வு செய்தனர். இதனால் தற்காலிகமாக பல சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளன.
இதுபற்றி தெரிவித்த கொருக்கை அரசு கால்நடைப் பண்ணை துணை இயக்குநர் டாக்டர் எம்.ஹமீத் அலி, “புயலால் 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் சேதமடைந்தன. எனினும் கால்நடைகள் மழையில் பாதிக்கக் கூடாது என்பதால் புயலுக்கு அடுத்த நாளே சில கொட்டைகைகளைச் சீரமைத்து விட்டோம். சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்றார்.