Published : 03 Dec 2018 12:21 PM
Last Updated : 03 Dec 2018 12:21 PM

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள அரசு மருத்துவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தமிழிசை

வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக அறிவித்துள்ள  மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக வேலை நிறுத்தப் போராட்டம்  செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதற்கு தமிழ்நாட்டிற்கு வருகின்ற நிலையில் மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் என்பது பல்வேறு  ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் போதுமான மருத்துவர்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரடியாக ஆஜராகவிட்டால் போதிய மருத்துவ ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு இதனால் 200 முதல் 300 மாணவர்களின் மருத்துவ இடங்கள் ரத்து  செய்வதற்கான ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டு முதல்வரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களைக் காப்பாற்ற வேண்டும்.  

நாடு முழுவதும் ஏறத்தாழ 6,000 முதல் 10,000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உருவாக்கியுள்ள நிலையில், தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள  அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x