

தென்சென்னை தொகுதியில் அதிமுக பாஜக இடையேதான் போட்டி அதிகம் உள்ளது. ஆம் ஆத்மியின் செல்வாக்கும் ஓரளவு உயர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அதிமுகவின் வாக்குகளை பாஜக பிரித்தால் தங்களது வாக்கு சதவீதம் உயரலாம் என்ற எதிர் பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.
தென் சென்னை தொகுதியில் ஜெயவர்தன் (அதிமுக), டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), எஸ்.வி.ரமணி (காங்கிரஸ்), இல.கணேசன் (பாஜக), ஜாஹிர் உசேன் (ஆம் ஆத்மி) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கெனவே வடசென்னையில் போட்டியிட்டு எம்.பி.யானவர். வடசென்னையில் எம்.பி. அலுவலகமே திறக்க வில்லை என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. இதனால், வடசென்னையிலிருந்து தென் சென்னை வேட்பாளரானவர். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், அதிமுக எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். இல.கணேசன் தொகுதி மக்களிடம் நன்கு பிரபலமானவர். எஸ்.வி. ரமணி பெரும்பாலும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் இருப்பவர். ஆம் ஆத்மி வேட்பாளர் தொகுதிக்கு புதியவர்.
விருகம்பாக்கம், சைதாப் பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி. இங்கு 50 சதவீதம் வரை உயர் நடுத்தர மக்களும், மீதமுள்ள 50 சதவீதத் தில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் பெரும்பா லும் படித்த வாக்காளர்களாக இருப்பதால், திமுக, அதிமுக கட்சிகளைவிட பாஜக, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பிரிப்பார்கள் என தெரிகிறது. அதிமுகவும், ஆம் ஆத்மியும் எல்.இ.டி. திரை மூலம் தெருக்களில் தீவிர பிரச்சாரம் செய்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியினரின் வந்தே மாதரம் பாடல் பிரச்சாரம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த முறை, பாஜக தலைமை யில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணியும், மோடி குறித்து செய்தி ஊடகங்களில் வெளியா கும் அதிகப்படியான செய்திக ளும், மக்களின் மனதை மோடிக்கு ஆதரவாக மாற்றும் சக்தியாகின் றன. சமூக வலைதள பிரச்சாரம், செல்போன் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம் ஆகியவற்றாலும், பாஜக தலைவர்களின் தொடர் பிரச்சாரங்களாலும், மோடி குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அதிக வாக்கு கள் உள்ளன. ஆனால், மயிலாப் பூர், விருகம்பாக்கம், தி.நகர் சட்ட சபைத் தொகுதிகளில், பாஜகவுக்கு அதிக வாக்குகள் வரலாம் என பாஜகவினர் எதிர்பார்த்துள்ளனர். இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளை பாஜக பிரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், தென் சென்னை யில் திமுகவினரின் பணி மந்தமாக உள்ளது. அதிமுக - பாஜக இடையே தான் போட்டி அதிகம் உள்ளது. ஆனால் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு பிரியும் நிலையில், அதன் மூலம் திமுகவின் வாக்கு சதவீதம் உயரலாம் என்ற எதிர்பார்ப் பில் திமுகவினர் உள்ளனர்.