Last Updated : 13 Jan, 2014 12:00 AM

 

Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திமுகவினரிடையே கடும் போட்டி

மக்களவைக்கு நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தமுறை திமுகவே நேரடியாக களமிறங்குவதற்கான ஆயத்தங்கள் தென்படுகின்றன.

இதுவரை தொடர்ந்து காங்கிரஸுடனான கூட்டணியே நீடித்து வந்ததால் அவர்களுக்கே தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு வேலையை பார்த்த திமுகவினர் தற்போது காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் தொகுதி மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

முதன்முதலில் நாஞ்சில் மனோகரன் போட்டியிட்டுத் தோற்ற இந்த தொகுதியில் இதுவரை திமுகவின் சார்பில் நேரடியாக நாடாளுமன்றத்துக்கு கா.சுப்ரவேலு மட்டும்தான் சென்றிருக்கிறார். அதனால் திமுக தொண்டர்கள் இந்த முறை திமுக வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அதுவும் கட்சியின் மூத்த உறுப்பினராக டி.ஆர்.பாலு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவல் உண்மைதானா? என்று கட்சிக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எங்களுக்கும் அப்படித்தான் தகவல் கிடைத்திருக்கிறது. தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடத்தான் அவருக்கு மிகுந்த ஆசை. ஆனால், தஞ்சாவூர் மாவட்ட செயலாளராகவும், தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்த பழனிமாணிக்கம் அந்த தொகுதியை உடும்புப் பிடியாக பிடித்திருக்கிறார். அதை விட்டுத்தர அவர் தயாராக இல்லை.

தஞ்சாவூர் தொகுதியைப் போலவே எல்லாவகையிலும் ஒத்த குணங்களை உடையது மயிலாடுதுறை. அதுமட்டுமில்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மயிலாடுதுறை தொகுதிக்குள்தான் வருகின்றன. இந்த பகுதியில் செல்லும் ரயில்களில் பெரும்பாலானவை அவரது முயற்சியால் வந்தவைதான். ரயில்வே துறை மூலம் பல சலுகைகளை இந்த பகுதிக்கு செய்திருக்கிறார். தற்போது மீனவர் உண்ணாவிரதப் பிரச்சினையில் அவரது வேகமும் முனைப்பும் நாகை மாவட்ட மக்களை ஈர்த்திருக்கிறது. அதனால் அவர் இங்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

இன்னொரு டி.ஆரால் திருப்பம்

லட்சிய திமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த டி.ராஜேந்தருக்கு தனது சொந்த ஊரான மயிலாடுதுறை மண் மீது அதிக பாசம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தே நின்று மக்களை சந்தித்து மூவாயிரத்து சொச்சம் வாக்குகளை வாங்கினார். ஆனாலும் மனம் தளராமல் இன்னொரு மல்லுக்கட்டுக்கு அவர் தயாராக இருந்தபோதுதான் கருணாநிதியின் அழைப்பு வந்தது. தற்போது மயிலாடுதுறை தொகுதியை வலியுறுத்திக் கேட்கிறாராம் டி.ராஜேந்தர்.

மேலும் இருவர் காத்திருப்பு…

இப்படி இரண்டு டி.ஆர்.களால் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால், கட்சியின் மூத்த முன்னோடியும் 2 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவருமான குத்தாலம் கல்யாணம் நாடாளுமன்ற ஆசையால் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி காத்திருக்கிறார். திருவிடைமருதூர் ராமலிங்கமும் சீட் கேட்டு களத்தில் இறங்குவார் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x