Published : 21 Dec 2018 12:56 PM
Last Updated : 21 Dec 2018 12:56 PM

மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

புதுவையில் பிறந்த பிரபஞ்சன் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கடலூர், சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களை தனது வாசஸ்தலமாக கொண்டு வாழ்ந்து வந்தாலும் எப்போதும் புதுவையோடு தொடர்பில் இருந்தார்.

சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரிக்கே குடிபெயர்ந்தார். சில மாதங்களுக்கு முன் புதுவை அரசு பிரபஞ்சனுக்கு அவரது இலக்கிய பங்களிப்புக்கு பாராட்டுவிழா நடத்தி கவுரவித்தது.

கடந்த 57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சமீப காலமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.

தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, விகடன், குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த பிரபஞ்சன் நாவல், சிறுகதை, கட்டுரைகள்  ஆகிய பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் யதார்த்தமான சம்பவங்களை தனக்கே உரிய பாணியில் எழுதி மானுடம் பேசும் உயர்ந்த படைப்புகளை அவர் தமிழுக்கு அளித்தார்.

அவற்றில் வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும் போன்ற நாவல்களும், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், நேற்று மனிதர்கள் ஆகிய சிறுகதை தொகுதிகளும் புகழ் பெற்றவை.

இவரது முட்டை நாடகம் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கில மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

பிரபஞ்சன் தனது வானம் வசப்படும் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x