Last Updated : 03 Dec, 2018 03:33 PM

 

Published : 03 Dec 2018 03:33 PM
Last Updated : 03 Dec 2018 03:33 PM

நாகரீக வளர்ச்சியால் மூடப்படும் வாடகை சைக்கிள் கடைகள்: ‘றெக்கை கட்டிப் பறந்தது’ அந்தக்காலம் 

மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும், நாகரீக வளர்ச்சியாலும் கிராமங்கள் தோறும் இருந்த வாடகை சைக்கிள் கடைகள் காணாமல் போய்விட்டன. தற்போது நகரப் பகுதிகளில் மட்டும் உள்ள ஒன்றிரண்டு கடைகளும் விரைவில் காணாமல் போய்விடும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீடுகளில் இருசக்கர வாகனங்களோ, கார்களோ இருக்காது. வெளியூர்களுக்கு செல்லவும், விவசாய விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும், பொருட்கள் வாங்கவும் வாடகை சைக்கிளையே பெரும்பாலும் நம்பி இருப்பார்கள். இதனால் கிராமங்களில் கூட இக்கடைகள் அதிகம் இருக்கும்.

வாகன பெருக்கம்

ஆனால், தற்போது சைக்கிள் ஓட்டுவதையே கவுரவ குறைச்சலாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள், வீட்டுக்கொரு கார் என நிலைமை மாறிவிட்டது.

இதனால் வாடகை சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

கிராமப்புறங்களில் இருந்த வாடகை சைக்கிள் கடைகள் தற்போது காணாமல் போய்விட்ட நிலையில் நகரப் பகுதிகளில் மட்டும் ஒன்றிரண்டு காணப்படுகின்றன. வெகு சீக்கிரம் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும்.

இதுகுறித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் சைக்கிள் கடை நடத்தி வரும் இ.பாஸ்டின் (56) என்பவர் கூறியதாவது:

எங்களது சொந்த ஊர் ஏரல் அருகேயுள்ள நடுவக்குறிச்சி கிராமம். எனது தந்தை தொழில் தேடி தூத்துக்குடி வந்து, 60 ஆண்டுகளுக்கு முன் இந்த கடையை ஒரே ஒரு சைக்கிளுடன் தொடங்கினார்.

பின்னர் சைக்கிள்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 1995- 1998 காலகட்டத்தில் 120 சைக்கிள்கள் வரை இருந்தன. அனைத்து சைக்கிள்களும் நாள்தோறும் வாடகைக்கு சென்றுவிடும்.

தூத்துக்குடி நகரப் பகுதியில் மட்டும் சுமார் 500 வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. தந்தைக்கு பிறகு நானும், சகோதரர்கள் இருவரும் சேர்ந்து இந்த கடையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்தக் கடை தான் எங்களை வாழவைத்தது. நாங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு இந்தக் கடை தான் காரணம்.

கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இத்தொழில் நலிவடைய ஆரம்பித்தது. மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் வரத்தை தொடர்ந்து வாடகை சைக்கிள் எடுப்பது குறைந்தது. தற்போது இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிள்களில் செல்வதே அரிதாகி விட்டது.

காணாமல் போகும்

தூத்துக்குடி நகரில் 5 வாடகை சைக்கிள் கடைகள் மட்டுமே உள்ளன. எங்கள் கடையில் தற்போது 30 சைக்கிள்களே உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 வாடகை வசூலிக்கிறோம். மருந்து விற்பனை பிரதிநிதிகள், கடைகளுக்கு பணம் வசூலிக்க வெளியூர்களில் இருந்து வருவோர் மட்டுமே தற்போது எங்களிடம் சைக்கிள் எடுக்கின்றனர். உள்ளூர்காரர்கள் யாரும் எடுப்பதில்லை. நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் எங்கள் தலைமுறையோடு இத்தொழில் முடிவுக்கு வந்துவிடும் என்றார் அவர்.கவுரவ குறைச்சலாக கருதுகின்றனர்

பாஸ்டின் மேலும் கூறும்போது, ‘‘இன்று தூத்துக்குடியில் பிரபலமாக இருக்கும் பல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் ஒரு காலத்தில் எங்கள் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து பயணித்துள்ளனர். ஆனால், இன்றைய இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றனர். இத்தொழில் நலிவடைய இதுவும் ஒரு காரணம்’’ என்றார்."இன்றைய இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றனர். நலிவடைய இதுவும் ஒரு காரணம்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x