Published : 15 Dec 2018 11:36 AM
Last Updated : 15 Dec 2018 11:36 AM

ஆயிரம் விளக்கில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள்: போலீஸ் விசாரணை

சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியில் நாய்களுக்கு விஷம் வைத்ததால் 25-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து கூவத்தில் மிதந்தன.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்கு பல மாநிலங்களிலிருந்து நோயாளிகள் அவர்களது உறவினர்கள் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் பகுதி பெரிய வியாபார ஸ்தலமாக மாறியுள்ளது. உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மெடிக்கல் ஷாப்கள் என உயர்தட்டு முதல் அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது.

இங்குள்ள மக்கீஸ் கார்டன் பகுதிக்கு பின்புறம் கூவம் ஆறு ஓடுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான நாய்கள் உள்ளன. நேற்று அதிகாலை இங்குள்ள கூவம் கரையோரம் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் செத்துக்கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பல நாய்கள் ஆற்றில் பிணமாக மிதந்தது. பல காகங்களும் இறந்துக்கிடந்தன.

உடனடியாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இறந்து கிடந்த நாய்களுக்கு யாரோ விஷம் வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். நாய்களால் தொல்லைக்குள்ளான யாரோ அவைகளை கொல்ல உணவில் விஷம் வைத்து பரிமாறியுள்ளனர்.

அதை சாப்பிட்ட நாய்கள் விஷத்தின் பாதிப்பால் கூவம் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளன. சில நாய்கள் கரையிலும், பல நாய்கள் ஆற்றிலும் பிணமாக மிதந்தன. விஷம் கலந்த உணவை சாப்பிட்ட காகங்களும் அங்கேயே விழுந்து இறந்துள்ளன. இதனால் அவை கொடிய விஷமாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இதை செய்தவர்களை கண்டுபிடித்து பிரிவு 429 (விலங்குகளை கொல்லுதல்) மற்றும் பிரிவு 277 (கூவம் நதியை மாசுப்படுத்தி கிருமிகளை பரவை வைத்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்யவும் நாய்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பவும் புகார் அளித்துள்ளார்.

நாய்களை பிடிக்காத கொடியவர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வது அதிகரித்து வருகிறது. நாய்களை மாநகராட்சியினர் பிடித்துச் சென்று கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க பிடித்து கருத்தடை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால் சென்னை மாந்கராட்சி அதில் போதிய கவனம் செலுத்தாததால் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இரவில் பொதுமக்களுக்கே அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இதற்காக நாய்களை கொல்வதை சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகவே நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x