திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் பக்கம்: காவல் ஆணையரிடம் புகார்

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் பக்கம்: காவல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

மு.க.ஸ்டாலின் பெயரில் போலியாக டிவிட்டர் பக்கம் உருவாக்கி, மத உணர்வுகளுக்கு எதிராக அவர் பதிவது போன்று கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களின் ட்விட்டருக்கு நீலக்கலர் டிக் மார்க் இருக்கும் அதே போன்று ஸ்டாலின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கம் போன்று உருவாக்கி நீலக்கலர் டிக் மார்க்கை போட்டோஷாப்பில் தயார் செய்து அதையும் பதிவு செய்து ஸ்டாலின் மதநம்பிக்கைக்களை அவதூறாக பதிவு செய்வதுபோன்று பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப்பதிவில்: “கோவிலுக்கு செல்பவர்கள் ஓட்டு திமுகவுக்கு வேண்டாம் அப்படி வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டுமானால் அப்படிப்பட்ட வெற்றியே தேவையில்லை” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டதுபோன்று பதிவிடப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டரில் மாற்று மதத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தந்து இந்து மதத்திலுள்ளவர்களை திட்டுவது போன்று பதிவு செய்துள்ளனர். இதைப் பார்ப்பவர்கள் ஸ்டாலினே பதிவு செய்ததுபோன்று எண்ணம் உண்டாக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திமுக தொண்டர்கள் மேலிடத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து  திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ப.முத்துக்குமார், ஆ.தாமோதரன் ஆகியோர்  காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர்.

சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து போலி ட்விட்டர் பக்கம் குறித்து புகார் மனுவை அளித்தனர். ட்விட்டர் பக்கத்தின் நகல் இணைப்பையும் சேர்த்து அளித்தனர். அவர்கள் புகாரில் கூறியிருப்பதாவது:

 “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பெயரில் போலியான  ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி,  அதில் அவருடைய கருத்திற்கு எதிராகவும், மத உணர்வுகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம் போலவே போலி ட்விட்டர் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

போலி ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினின் புகழுக்கு பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக இந்து மத மக்களிடையே களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

போலி ட்விட்டர் பக்கத்தில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் அமைந்துள்ளதால், இதனை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in