Last Updated : 23 Dec, 2018 07:54 AM

 

Published : 23 Dec 2018 07:54 AM
Last Updated : 23 Dec 2018 07:54 AM

பொங்கல் பண்டிகையின் மங்கல அடையாளம்; மஞ்சள் செடிகளில் ‘கவாத்து செய்யும் பணி: கும்பகோணம் பகுதிகளில் விவசாயிகள் மும்முரம்

பொங்கல் பண்டிகைக் கொண்டாட் டத்தின்போது வீடுகளில், தொழுவத் தில் தோரணம் கட்ட, பொங்கல் பானையில் கட்ட என பல விதங் களில் பயன்படும் மஞ்சள் செடி களை இறுதிக் கவாத்து (தேவை யற்ற, சருகாகிவிட்ட இலைகளைக் களைவது) செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவின் தவிர்க்க முடியாத அம்சங்களில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, புதுப்பானை, அச்சு வெல்லம், பச்சரிசி, மாடு களுக்கு கட்ட பயன்படும் நெட்டி மாலை ஆகியவை முக்கிய மானவை. செங்கரும்பும், மஞ்சளும் மிகவும் முக்கியமானவை.

புதுப்பானையில் பச்சரிசியைக் கொண்டு, பொங்கலிட்டு இறை வனுக்குப் படைத்து வழிபடும் போது, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும் புதுப்பானையின் கழுத் துப் பகுதியை அலங்கரிப்பது மஞ் சள் கொத்துதான். மங்கலகரமாக ஒரு செயலைத் தொடங்குவதற்கான ஒரு குறியீடாக இது உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க மஞ்சள் செடி சாகுபடியில் தஞ்சாவூர் மாவட் டம் கும்பகோணம் பகுதி விவசாயி கள் ஏராளமானோர் காலங்காலமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், புதுப்படையூர், மனப்படையூர், சோழன்மாளிகை, கோபிநாத பெருமாள் கோவில், திருமேற்றளிகை உள்ளிட்ட கிரா மங்களில் 100 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுவது வழக்கம்.

ஆடி மாதம் அமாவாசை தினத் தன்று மஞ்சள் கிழங்கு துண்டுகளை நிலத்தில் ஊன்றிக் காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் விட்டு, களை எடுத்து மார்கழி மாதத்தில் இறுதிக்கட்ட கவாத்து செய்து, மார்கழி கடைசி வாரத்தில் அறு வடை செய்து தை முதல் தேதிக்கு விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி, மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில் தற் போது மஞ்சள் செடிகளில் தேவையில்லாத இலைகளை அகற்றி, இறுதிக்கட்ட கவாத்து செய்யும் பணியிலும், களை பறிக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வயலிலேயே விலை பேசப்படும்

இதுகுறித்து கோபிநாத பெரு மாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் கூறியதாவது:

‘‘நாங்கள் பல ஆண்டுகளாக பொங்கலுக்குப் பயன்படும் மஞ்சள் பயிரிட்டு வருகிறோம். ஒரு ஏக்கரில் 9 ஆயிரம் மஞ்சள் கிழங்குகளை நட்டுப் பயிர் செய்யலாம். ஆறு மாதங்கள் இந்த மஞ்சள் செடி களைப் பராமரித்து வர வேண்டும். மார்கழி மாதம் மூன்றாவது வாரத் திலிருந்து (டிசம்பர் மாத இறுதியில்) வியாபாரிகள் வயலுக்கே வந்து, மஞ்சள் செடிகளைப் பார்த்து எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள்.

வியாபாரிகள் வந்து பார்க் கும்போது பச்சைப் பசேல் என கண்ணைக் கவரும் விதத்தில் மஞ்சள் செடிகள் ஒரே சீராக இருந் தால் நல்ல விலை கிடைக்கும். அதற்காக மஞ்சள் செடிகளில் காணப்படும் அழுகிய மற்றும் பழுப்பு நிற இலைகள், காய்ந்த சருகுகள் ஆகியவற்றை கவாத்து செய்து விடுவோம். அந்தப் பணியில் இப்பகுதி விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் வராத நிலையில் இன்னும் இரு வாரங்கள் கழித்து மஞ்சள் கொத்துடன் செடிகளைப் பறித்து, வேர்களில் பற்றியிருக்கும் மண்ணைக் கழுவிவிட்டு இலைகள் சேதமடையாமல் கட்டுகளாகக் கட்டி பல்வேறு பகுதிகளுக்கு விற் பனைக்கு அனுப்பி வைப்போம். நன்கு விளைந்த மஞ்சள் கொத்து ரூ.25 முதல் விலை போகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x