

தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ‘பெய்ட்டி’ புயல், தற்போது காக்கிநாடாவுக்கு தெற்கே சுமார் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் காக்கிநாடா அருகே, கரையை கடக்கக்கூடும். இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புயல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ. வரையும், சமயங்களில் 100 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும். தமிழகத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது.
புயல் நமக்கு அருகில் கரையை கடந்து செல்லும்போது, வடதிசையில் இருந்து காற்று அதிகமாக வீசிய நிலையில், நிலப்பகுதி காற்று வீசிய பொழுது குளிர்காற்றாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பகல் நேர வெப்ப நிலையானது, இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. நேற்று பகல் நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 25.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 3.6 டிகிரி செல்சியஸ் குறைவு. மீனம்பாக்கத்தில் 25.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்பை விட 3.2 டிகிரி செல்சியஸ் குறைவு.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 3 தினங்களுக்குப் பிறகு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் காரணமாக மழை பெய்யக்கூடும்’’ எனக் கூறினார்.