

தமிழகத்தை கஜா புயல் கடந்த நவ.16-ம் தேதி தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. உடனடி நிவாரணமாக ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்புக்காக ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கே.பழனிசாமி நேரில் மனு அளித்தார்.
தொடர்ந்து மத்திய குழுவினரும் தமிழகம் வந்து பார்வையிட்டு சென்றனர். அவர்கள் தற்போது அறிக்கையை மத்திய உள்துறைக்கு அளித்துள்ளனர்.
இதற்கிடையில், தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆண்டுதோறும் ஒதுக்கவேண்டிய தொகையில் இரண்டாம் கட்ட தொகையான ரூ.353 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு ஒதுக்கியது. இருப்பினும் தமிழக அரசு கோரிய நிதியை இதுவரை தரவில்லை.
இரு கட்டங்களாக மதிப்பீடு செய்து உடனடி நிவாரணமாக ரூ.1,431 கோடிக்கு பதில், ரூ.2,700 கோடி வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கான சான்றாவணங்களை அளிக்கும் படி மத்திய அரசும் தெரிவித்திருந் தது.
இந்நிலையில், தமிழக தலை மைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமையில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். அவர்கள் டெல்லியில் நேற்று முன்னாள் மத்திய அமைச் சர் வீரப்ப மொய்லி தலைமையில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது நிலைக்குழுவிடம், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி கூறினர். இதுதவிர, உள்துறை அதிகாரிகளை சந்தித்து கூடுதல் நிதிக்கான ஆவணங்களை சமர்ப் பித்துள்ளதுடன், அதிகப்படியான நிதியையும் கோரியுள்ளதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.