

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி, விற்பனை செய்ததாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங் கர் குப்தா மற்றும் மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டி யன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை யடுத்து, 6 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் ஜன.9-ம் தேதி வரை நீட்டித்து முதன்மை நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், வரும் டிச.29 அன்று நடைபெறவுள்ள தனது மகளின் திருமணத்தில் பங்கேற்க தனக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மாதவ ராவ் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையேற்ற நீதிபதி திருநீலபிரசாத், நேற்று முதல் வரும் ஜன.1-ம் தேதி வரை ஒருவாரத்துக்கு மாதவ ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதோடு, வரும் ஜன.2-ம் தேதி அவரை ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார்.