

கழிப்பறை மேற்கூரை இடிந்து கட்டிடத் தொழிலாளி பலியான வழக்கில் பல்லடம் நகராட்சி, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான அசோக் குமார் கடந்த மே மாதம் 12-ம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டணக் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது, கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுதொடர்பாக பல்லடம் நகராட்சியில் அசோக் குமாரின் மனைவி சரஸ்வதி புகார் அளித்தார்.
நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை முறையாகப் பராமரிக்காததே தனது கணவர் மரணத்திற்குக் காரணம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சரஸ்வதி வழக்கு தொடர்ந்துள்ளார். கணவரின் மரணத்திற்குக் காரணமான பல்லடம் நகராட்சி நிர்வாகம் தனது மூன்று குழந்தைகள், மாமனார், மாமியார் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்காகவும், கல்விச் செலவுகளுக்காகவும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இது குறித்து தமிழக அரசும், பல்லடம் நகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.