Published : 07 Dec 2018 04:16 PM
Last Updated : 07 Dec 2018 04:16 PM

மேகேதாட்டு அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி விமர்சனம்

மேகேதாட்டு அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் என்ற கவலையில், திமுக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த நவம்பர் 28 ஆம் தேதி கூட்டியது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதே.

அதே நேரத்தில், இந்தப் பிரச்சினைக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டிக்காமல், மயிலிறகால் வருடுவது போன்ற வேண்டுகோள் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பைப் போதிய அளவில் பூர்த்தி செய்யக்கூடியதல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டிய இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு, தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்த திமுகவின் செயல்பாட்டையும், பெருந்தன்மையையும், பொறுப்புணர்வையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

அதேபோல, 'கஜா' கோரப் புயலால் கடும் சேதம் ஏற்பட்டு பல மாவட்டங்கள் வேரோடு பிடுங்கித் தூக்கி எறியப்பட்ட நிலை குறித்து சட்டப்பேரவையை ஒரு நாள் கூடுதலாக நீட்டித்து விவாதிக்கலாம் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தினை ஆளும் அரசு ஏற்றுக்கொள்ளாதது கண்டனத்திற்குரியது.

நிவாரண நிதியை சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்வதுபோல, பெயரளவிற்கு அளிக்க வந்த நிலையில், சட்டப்பேரவையில் அதனைச் சுட்டிக்காட்டி, மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு அளிக்க சட்டப்பேரவையில் வற்புறுத்தும் வாய்ப்பை முதல்வர் ஏன் தவறவிட்டு விட்டார்? விமர்சனங்களை எதிர்கொள்ளும் அச்சத்தாலா?

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினால், இவற்றையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம் என்று புள்ளி விவரங்கள் கைவசம் இருந்தால், அவற்றையும் அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் எடுத்துக் கூறும் வாய்ப்பை ஆளும் கட்சி ஏன் தவறவிடவேண்டும்?

மடியில் கனமா?

தமிழ்நாட்டின் பாதிப்பை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறுவதற்குக்கூட தயக்கமா? அச்சமா? மத்திய - மாநில அரசுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டை தண்டிக்கவேண்டுமா? அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் பலம் எத்தகையது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தத்தான் போகிறது" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x