

தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரப் போவதில்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போதைய தலைவராக உள்ள திருநாவுக்கரசர் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார். பல்வேறு பிரச்சினைகளில் அவர் தமிழக காங்கிரஸ் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட கருத்துகளையும் தெரிவிப்பதுண்டு.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் என்னை மட்டுமல்ல, எல்லோரையும் திட்டுகிறார். ப.சிதம்பரம், அவரது மனைவி, மகன், தங்கபாலு என பொறுப்பில் உள்ள அனைவரையும் அவர் வசைபாடுகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற முயல்கிறேன் என அவர் ஓயாமல் டெல்லி செல்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முடிந்தால் முயற்சி செய்யட்டும். தலைவரை மாற்றிவிட்டு வரட்டும். ஆனால், அவர் தலைவராக வரப் போவதில்லை" என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.