உடுமலை சங்கரின் குடும்பம் பங்கேற்று நடத்தி வைத்த கவுசல்யாவின் திருமணம்: ஸ்டாலின் வாழ்த்து

உடுமலை சங்கரின் குடும்பம் பங்கேற்று நடத்தி வைத்த கவுசல்யாவின் திருமணம்: ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே கவுசல்யாவின் திருமணத்தை நடத்தி வைத்திருப்பது அவரின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

கவுசல்யாவின் மறுமணத்துக்கு சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன்.

இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in