Published : 21 Apr 2014 08:36 AM
Last Updated : 21 Apr 2014 08:36 AM

எங்களை ஒதுக்கிவிட்டு திராவிடக் கட்சிகளால் அரசியல் செய்ய முடியாது: தமமுக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் அவர் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.

உங்களை எட்டாண்டு காலம் சிறைவைக்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. இந்த ஆட்சியில்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆதி திராவிடர்கள் கொல்லப்பட்டார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு, அதிமுக-வுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்களே?

1992-ல் என்னுடைய வளர்ச்சியை தடுக்க நினைத்த காவல்துறை அதிகாரிகள் சிலர் போட்ட பொய் வழக்கு அது. என்னை எட்டாண்டுகள் சிறை வைத்ததில் சில சட்டம் படித்த மேதாவிகளின் சாதிய ரீதியிலான சதி இருந்ததே தவிர இதில் அதிமுக-வுக்கு எந்தப் பங்கும் இல்லை. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமும் ஒருசில சாதி வெறி பிடித்த அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலையே.

கூலி உயர்வு கேட்டு பேரணி நடத்திய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை தாமிரபரணி ஆற்றில் முழ்கவைத்து சாகடித்தது திமுக அரசு. 1989-ல் தேனி மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கலவரத்தை உண்டாக்கினார்களே அப்போது இருந்ததும் திமுக ஆட்சிதான். ஆக போலீஸிலேயே திமுக போலீஸ், அதிமுக போலீஸ் என ரெண்டு கோஷ்டிகள் இருக்கு. இவங்கதான் சாதிக் கலவரத்தை தூண்டுறாங்க.

தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கான கட்சிகள் நீர்த்துப் போய்விட்டதுபோல் தெரிகிறதே?

நீர்த்துப் போய்விடவில்லை. ஒருசில கட்சிகள் திமுக பக்கமும் எங்களைப் போன்றவர்கள் அதிமுக பக்கமும் சேர்ந்திருக்கிறோம். அவரவருக்கு விருப்பமான அணிகளில் இருப்பது தவறில்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கான அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு திராவிடக் கட்சிகளால் அரசியல் பண்ண முடியாது.

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது, மத்தியில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்கிறார்களே?

எல்லோரும் அப்படித்தான் சொல் கிறார்கள். தேர்தல் முடிஞ்சாத்தான் உண்மை என்னன்னு தெரியும். ஆனா, தமிழ் சாதிகளைச் சாகடித்த, கோடி கோடியாய் கொள்ளையடித்த காங்கிர ஸுக்கு எதிராக நாடு முழுவதும் அலை யடிப்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் பலனை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் அறுவடை செய்யும்.

இந்தத் தேர்தலில் யாருமே உங்களை அழைக்காததால் அதிமுக-வை ஆதரித்தீர்களா?

தேர்தலில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கூட்டணி சேர லாம். ஆனால், எனக்கு யாரை பிடிக் கிறதோ, எனக்கு யார் உரிய மரியாதை கொடுக்கிறார்களோ அங்குதான் நான் செல்லமுடியும். திமுக எங்களை மதிக்க வில்லை. அதிமுக தரப்பில் எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அழைத் தார்கள். மதியாதார் வாசல் மிதிக்க வேண் டாம் என்பதால் எங்களை மதித்தவர்க ளோடு கூட்டணி வைத்திருக்கிறோம்.

கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் திமுக கூட்டணியில் தங்களுக்கான தொகுதிகளை உறுதிப்படுத்தியது போல் நீங்களும் அதிமுக-விடம் ஒரு தொகுதியை கேட்டு பெற்றிருக்கலாமே?

திருமாவளவன் அவரது கட்சியை திமுக-வின் ஒரு அங்கமாகத்தான் வைத்திருக்கிறார். அதனால், அவருக்கு இரண்டு சீட் கொடுத்தார்கள். மாநிலங்களவைத் தேர்தலில் தனது மகள் கனிமொழிக்கு வாக்களித்ததற்காக கிருஷ்ணசாமிக்கு தேவையானதைக் கொடுத்த கருணாநிதி, ஒரு சீட்டும் கொடுத்திருக்கிறார். கிருஷ் ணசாமி ஒரு அரசியல் வியாபாரி. தேர்த லுக்குப் பிறகு அவர் பாஜக அணிக்கு தாவினாலும் ஆச்சரியமில்லை. சட்டமன்றத் தேர்தலில் எங்க ளுக்கு உரிய அங்கீகாரம் தருவதாக அதிமுக தரப்பில் உறுதி கொடுத் திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x