

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் விவகாரம் பெரிதானதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறித்துள்ளனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.
சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றபட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து ரமேஷ் குறித்து பெரிதாக பேசப்பட்டது. இதையடுத்து ரத்தத்தை தானமாக கொடுத்த அந்த இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது.
அந்த 19 வயது இளைஞர் கமுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.