Last Updated : 19 Dec, 2018 03:22 PM

 

Published : 19 Dec 2018 03:22 PM
Last Updated : 19 Dec 2018 03:22 PM

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் பிளாஸ்டிக்கின் அபாயத்தை உணர்ந்து அதைத் தவிர்க்கவும், குறைவாகப் பயன்படுத்தவும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஆரம்ப காலங்களில் நாற்காலி, மேசை போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பிற்கு மட்டுமே பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது உணவகங்களில் பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகள், ஸ்பூன்கள் என அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகளில் தேநீர் அருந்துவது, உணவு உண்பது போன்றவற்றால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

ஒடிசா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகிக்கும் கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என நான் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த ஜூன் 25 ஆம் தேதி அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது.

அந்த அரசாணை மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை விதிக்கும் வகையில் உள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட பிளாஸ்டிக்குக்கு மட்டும் தடை விதிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகக் குறைக்க இயலாது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து, மத்திய அரசு விதிப்படி, பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது புதிதாக அரசாணையை இயற்றவோ உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒரு குறிப்பிட்ட பிளாஸ்டிக்குக்கு மட்டும் தடை விதிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு இதுபோன்ற அரசாணைகளை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஏற்கெனவே சிக்கிம், ஹரியாணா, கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இதுபோல அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள்,  பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x