

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஊதியம் வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட அளவில் பணி மாறுதல், கூடுதல் பொறுப்புக்கு சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த டிச.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
10 நாட்களை கடந்து வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சேத மதிப்பீடு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,‘நோ ஒர்க்- நோ பே’ என்ற அடிப்படையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘‘அரசின் சாதாரண பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அது தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.
முன் அனுமதி பெற்று தற்செயல் விடுப்பு எடுக்காத நிலையில், அவர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.