Published : 02 Sep 2014 08:57 AM
Last Updated : 02 Sep 2014 08:57 AM

ரஷ்யா மீது போர் தொடுப்போம்: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்

உக்ரைன் அரசுப் படைகள் தங்கள் நிலைகளில் இருந்து வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கடும் இழப்புகளைச் சந்திக்க நேரி டும் என்று கிளர்ச்சிப் படை எச்சரித் துள்ளது. ஆனால் டோன்ஸ்க், லூதான்ஸ்க் எல்லையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இருதரப்பிலும் இடைவிடாது பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இரவு பகலாக சண்டை நீடிப்பதால் கிழக்கு உக்ரைனில் மின் விநியோகம் தடைபட்டு பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

ரஷ்யாவுடன் அண்மையில் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதிக்கு உக்ரைனில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படு கிறது. அங்கு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டி ருப்பதால் அந்தப் பிராந்தியமும் இருளில் மூழ்கியுள்ளது.

உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ தலைநகர் கீவில் அளித்த பேட்டியில், கிளர்ச்சிப் படையினர் வன்முறையை கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது, எனவே அவர்களுக்கு எதிராக போர் தொடுக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்று தெரிவித்தார்.

புதிய சுற்று அமைதிப் பேச்சு

இதனிடையே பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சிப் படைகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை புதிய சுற்று பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளர்ச்சிப் படை பிரதிநிதி ஆன்ட்ரே பர்கின் கூறியபோது, கிழக்கு உக்ரைன் பகுதி சுதந்திரம் அடையும்வரை எங்கள் போராட்டம் தொடரும். இப்போதைக்கு உக்ரைன் அரசுடன் தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

அதிபர் புதின் வேண்டுகோள்

‘உக்ரைன் அரசும் கிளர்ச்சிப் படையினரும் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரைந்து அரசியல் தீர்வை எட்ட வேண்டும்’ என்று ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x