

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடுவதற்காக அந்தமானில் இருந்து ராணுவக் கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளைக் கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் கஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களிடம் நேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவர், பின் னர் பேசியதாவது:
புயலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும். எனவே, சமூக பொருளாதார கணக்கெடுப்பு திட்டத்தில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்து பட்டியலில் சேர்த் துக்கொள்ளவும்.
தென்னங்கன்றுகள்
முறிந்து விழுந்துள்ள தென்னை மரங்களை அகற்றுவதற்கான நட வடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். அதன்பிறகு, அந்த இடத்தில் புதிதாக நடுவதற்கு தமிழக அரசிடம் போதுமான தென் னங்கன்றுகள் இல்லையென்றால் கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷாவில் இருந்து மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அந்தமானில் இருந்து கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை ஏற்றிவர நடவடிக்கை எடுக்கப்படும். தென்னந் தோப்பில் ஊடுபயிர் சாகுபடிக்கும் மத்திய அரசு உதவி செய்யும்.
பிரதமரின் கவனத்துக்கு...
இதற்காக, மத்திய அரசின் தோட்டக்கலைத் துறைச் செயலாளர் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் அதிகாரியை ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொள்வார்கள். மேலும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க இயலுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்கிறேன். பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
முன்னதாக, நெடுவாசல் கிராம மக்கள் சார்பில் தட்சிணாமூர்த்தி என்பவர் பேசியபோது, “கடின உழைப்பால் விவசாயத்தைக் கொண்டு முன்னேறி வந்த இப்பகுதி மக்கள், புயலால் 25 ஆண்டு கள் பின்னோக்கி சென்றுவிட்டனர். எனவே, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசு உதவி செய்ததைப் போல இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் நிலையில் உதவி செய்ய வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், ஆட்சியர் சு.கணேஷ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூடுதல் மண்ணெண்ணெய்
தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணியில் தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய தாவது:
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழு, அதன் அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அளிக்கும். தென்னை சேதமடைந்துள்ளதால் வங்கிகளில் வாங்கியுள்ள கடனை கட்ட இயலாத நிலையில் உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்திடம் தெரிவித்து, வங்கிக் கடனுக்கான அசல் மற்றும் வட் டியை தள்ளுபடி செய்ய பரிந்துரைப்போம்.
மின்சார பிரச்சினை தீரும்வரை கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க பெட்ரோலியத் துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணெண்ணெய் டேங்கர்கள் டிச.1-ம் தேதி (இன்று) மாலைக்குள் வந்து சேர்ந்துவிடும். இந்த மண்ணெண்ணெய், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முகாம்கள் அமைத்து விநியோகம் செய்யப்படும்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது. மத்திய அரசு உங்களுடன் இருக்கும். நாட்டுக்கே நெற்களஞ்சியமான இப்பகுதி மக்களுக்கு எல்லாவித உதவிகளும் கிடைக்கும் என்றார்.
மீட்பு பணிக்கு ராணுவம்
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் நேற்று முன் தினம் இரவு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களிடம் கூறியபோது, "தமிழக அரசு, புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணி மேற்கொள்ள ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்கவில்லை. தற்போது கேட்டால் அனுப்புவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார்.