

சென்னை சேத்துப்பட்டில் பிரிந்து வாழ்ந்த மனைவியை நடுசாலையில் மது போதையில் கணவர் குத்திக் கொன்றார்.
சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் டேவிட் (45). இவரது மனைவி லேகா (37). டேவிட், லேகா இருவரும் காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 13 வயதிலும், 12 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
டேவிட் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்வில் போகப்போக பிரச்சினைகள் ஆரம்பித்தன. டேவிட்டுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். நாளடைவில் கணவரின் சந்தேகப் புத்தியால் ஏற்படும் தகராறால் கடந்த ஆண்டு கணவர் டேவிட்டை விட்டு தனது குழந்தைகளுடன் பிரிந்து வாழ ஆரம்பித்தார் லேகா.
கணவரைப் பிரிந்த லேகா சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டத்தில் வசித்து வந்தார். இன்று மதியம் டேவிட் முழுக்க குடித்துவிட்டு சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம் வழியாக நடந்து வந்துள்ளார். மனைவியிடம் வம்பிழுக்க கத்தியுடன் சென்றுள்ளார். இதை அறியாமல் மதியம் 2.30 மணியளவில் லேகா அவ்வழியே வர, அவரை வழி மறித்த கணவர் டேவிட் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் லேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தவர் டேவிட்டை மடக்கிப் பிடித்தனர். சேத்துப்பட்டு போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் டேவிட்டை கைது செய்தனர். லேகாவின் உடல் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மது போதையால் மனைவியை சந்தேகப்பட்டு, குடும்ப வாழ்வும் சிதைந்தது. பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் டேவிட்டின் செயலால் தாயாரையும், தந்தையையும் இழந்த இரண்டு பெண் குழந்தைகள் நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.