மீனவர்களை விட்டுவிடுங்கள்; படகுகளை சிறைபிடியுங்கள்: இலங்கைக்கு சுப்பிரமணிய சுவாமி சொன்ன ஆலோசனை

மீனவர்களை விட்டுவிடுங்கள்; படகுகளை சிறைபிடியுங்கள்: இலங்கைக்கு சுப்பிரமணிய சுவாமி சொன்ன ஆலோசனை
Updated on
1 min read

தமிழக மீனவர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து சர்சையை கிளப்பியுள்ளது.

பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்: "நான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள் பணக்காரர்கள். தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பான தமிழர்களும் கூறுகின்றனர். எனவே, எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் வெளியான சர்ச்சைக்குரிய கட்டுரையில்கூட, விசைப்படகு உரிமையாளர்கள் நெருக்கடி காரணமாகவே எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், அத்துமீறும் மீனவர்களை விடுவித்துவிட்டு, படகுகளை மட்டும் கைப்பற்றியதற்காக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சுவாமி நன்றி தெரிவித்திருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in