

அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறி பெண்கள் மீது அவர்களது வழக்கறிஞரை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் கணேசன். பிராட்வே சாலையில் அலுவலகம் வைத்துள்ளார். இவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகப் பாலியல் புகார் கூறிய பெண்ணுக்காக முன்னர் பழைய வழக்குகளில் ஆஜரானவர். இவர் அவர்கள் மீது முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவரது புகாரில், வழக்கறிஞரான தான் கடந்த 2014-ம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் பிராட்வே கிளை மேலாளர் ஒருவர் புகார் கூறப்பட்ட பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக அந்தப்பெண் மற்றும் அவரது தாயாருக்காக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜரானேன். தாயார் சார்பாக புகார் கொடுக்க ஆஜரானதற்கு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைத் தராமல் ஏமாற்றி வந்தனர்.
சில மாதங்கள் கழித்து தாய் மகள் இருவரும் தன்னிடம் வந்து எழும்பூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள பாதிரியார் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டனர். அப்போது ''நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பழைய ஊதியத் தொகையைக் கொடுங்கள். பின்னர் ஆஜராகிறேன்'' என்று தெரிவித்தேன். வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் ஒரு வாரம் முன்பு பிராட்வே சாலையிலுள்ள பிராட்வே தியேட்டர் அருகில் தாயாரை நேரில் பார்த்த நான், எனக்குத் தரவேண்டிய ஊதியத்தைப் பற்றிக் கேட்டேன். ஊதியத்தைக் கேட்டால் உங்கள் மீது பாலியல் புகார் கொடுத்து விடுவேன். இல்லையென்றால் அடியாட்களை வைத்து தொலைத்து விடுவேன் என அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறு வழக்கறிஞர் கணேசன் புகார் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறி பிரபலமான பெண்கள் மீது வழக்கறிஞர் கணேசன் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 420 (மோசடி) மற்றும் 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் முத்தையால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.