Last Updated : 22 Sep, 2014 09:35 AM

 

Published : 22 Sep 2014 09:35 AM
Last Updated : 22 Sep 2014 09:35 AM

புரட்டாசி விரதம் எதிரொலி: சிக்கன், மட்டன் விற்பனை மந்தம் - மீன்கள் விலை குறைந்தது

புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று, சென்னையில் இறைச்சிக் கடைகளில் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது.

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில் களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை அதிகமாக இருக்கும். புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிக்கன், மட்டன் விற்பனை மந்த மாகவே இருந்தது. மார்க்கெட்களுக்கு மீன் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. விற்பனை குறைந் தாலும் சிக்கன், மட்டன் விலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. சிக்கன் ஒரு கிலோ ரூ.150-க்கும், மட்டன் ரூ.440-க்கும் விற்கப்பட்டது.

ஆனால் மீன்களின் விலை மட்டும் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன், தற்போது ரூ.400 முதல் ரூ.420 வரை விற்பனையாகிறது. இதேபோல வவ்வால் மீன் கிலோவுக்கு ரூ.150 குறைந்து ரூ.300-க்கும், கொடுவா மீன் ரூ.80 குறைந்து ரூ.220-க்கும் விற்கப்பட்டது. இறால் கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.200-க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரிகள் கூறும் போது, ‘‘மார்க்கெட்களில் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் விலை குறைந்துள்ளது. ஆனால், விற்பனைதான் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. மீன்கள் விற்பனை ஆகவில்லை என்றால் கடனை எப்படி அடைப்பது என தெரிய வில்லை’’ என்றனர்.

சிக்கன், மட்டன் விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு ஆடு, கோழி உற்பத்தி குறைவாக இருப்பதால் சிக்கன், மட்டன் விலை குறையவில்லை. அடுத்த மாதம் பக்ரீத் பண்டிகை வருகிறது. அப்போது சிக்கன் கிலோ ரூ.190 ஆகவும், மட்டன் ரூ.500 ஆகவும் விலை உயர வாய்ப்புள்ளது. அந்த பண்டிகையைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என தெரிவித் தனர்.

மீன், சிக்கன், மட்டன் விற்பனை மந்தமாகியுள்ள நிலையில், காய் கறிகளின் விற்பனை சூடுபிடித் துள்ளது. தற்போது விலையும் குறைந் துள்ளதால் காய்கறிகளை மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x