

இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் வானிலை அறிக்கையே நம்பகமானது, புயலை உருவாக்கி புயலுக்கு பெயரே வைக்கும் வேலையில் சிலர் ஈடுபடுகிறார்கள் என வருவாய் நிர்வாகத்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறுகிறது. இதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
“பல தரப்பினரும் பல்வேறு நிலைகளில் புயல் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அதை தெளிவுப்படுத்தும் விதத்தில் செய்தியாளர் சந்திப்பு. இந்திய வானிலை ஆய்வு மையம் 12/12/2018 நிலவரப்படி தென் வங்கக்கடலின் மத்திய பகுதிகள், இந்தியப்பெருங்கடலின் மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அதனைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைத்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு அதிகாரபூர்வமாக மக்களுக்கு தெரிவித்துள்ள செய்தி.
இதில் பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு சொல்லப்பட்டு வருகிறது. அந்த செய்திகள் யூகங்கள் அடிப்படையில் சொல்லப்பட்டு வருகிறது. தற்போதைய நிலைவரை வருவாய் நிர்வாக ஆணையர் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
இந்த தாழ்வுமண்டலம் அடுத்த 72 மணி நேரத்திற்கு தெற்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் வட தமிழக கடற்கரையோரம் நகர்ந்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச 12 முதல் 16 வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் யாரும் டிச. 12 முதல் 16 தேதிவரை இந்தியப்பெருங்கடலின் மையப்பகுதி மற்றும் தென் வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் அறிவுரை அளிக்கப்பட்டு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
டிச 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமுதல் பெய்யக்கூடும் என்கிற எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வடகிழக்கு பருவமழை 32 வருவாய் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகும் என்கிற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தக்கட்டம் நாங்கள் உன்னிப்பாக கவனித்து தேவையான செய்திகளை தேவையான நேரத்தில் அளிக்க கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என உறுதியளிக்கிறோம்.”
இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.