பரோட்டாவுக்கு அதிக விலை கூறுவதா? - ஹோட்டலில் நடந்த தகராறில் சிறுவன் உட்பட 7 பேர் கைது

பரோட்டாவுக்கு அதிக விலை கூறுவதா? - ஹோட்டலில் நடந்த தகராறில் சிறுவன் உட்பட 7 பேர் கைது
Updated on
1 min read

பரோட்டா விலையால் ஏற்பட்ட தகராறில் அடிதடியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்த வாகனத்தில் பலர் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சிலந்திப்பேட்டையைச் சேர்ந்த சிலர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பினர். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உணவு அருந்தச் சென்றனர்.

ஹோட்டலில் பரோட்டா விலையை கேட்டபோது ஊழியர் அளித்த பதிலில் சாப்பிட வந்தவர்கள் அதிர்ந்தனர். எங்கள் ஊரில் ஒரு பரோட்டா ரூ. 5 இங்கு ரூ. 30 என்பதால் ஹோட்டலுக்கு வந்தவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் குரோம்பேட்டை போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் அடிதடியில் ஈடுபட்டதாக சிலந்திப்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் சிவகாசி, சதீஷ், வீரராகவன், பேரறிவாளன், பாலசந்திரன், முத்துக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சிறுவனை செங்கல்பட்டு சீர்த்திருத்தப்பள்ளியிலும் மற்ற 6 பேரையும் சைதப்பேட்டை கிளை சிறையிலும் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in