

தமிழகத்தில் 6 ஆயிரம் பள்ளிகளில், 462 கோடி ரூபாய் செலவில் கணினி ஆய்வகங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரிய அறிவிப்பாணையை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில் நுட்ப திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 ஆயிரத்து 29 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப கணினி (ஹை - டெக்) ஆய்வகங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் ஒப்பந்தபுள்ளிகள் கோரியது.
462 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடர்பான இந்த ஒப்பந்த புள்ளி அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரி, சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி பச்சமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகளில், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், இந்திய வர்த்தக இதழிலும் ஒப்பந்த புள்ளிகளை வெளியிட வேண்டும் என்ற 2011-ம் ஆண்டு அரசாணை பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது.
உரிய குழுக்களை நியமிக்காமல் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு ஜனவரி 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.