

சென்னையில் கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழகம் மற்றும் புதுவைக் கான கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் தெரிவித்தார்.
இந்திய கடற்படை தினம் இன்று (4-ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது, அவர் கூறிய தாவது:
1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகள் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் டிச.4-ம் தேதி இந்தியக் கடற்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் வேளையில் பாதுகாப்பான வர்த்தகம் மேற் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் 90 சதவீத வர்த்தகம் கடல்வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பாதுகாப்பான வர்த் தகம் மேற்கொள்ளவும், கடல்வழி யான தீவிரவாதம், கடத்தல் சம்ப வங்களைத் தடுக்கும் பணியிலும் இந்தியக் கடற்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
‘மேக் இன் இந்தியா’
‘மேக் இன் இந்தியா’ திட்டத் தின் கீழ், பல நவீன விமானங் கள், ஹெலிகாப்டர்கள் உள்நாட் டில் தயாரிக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரம் சென்று எதிரிகளின் இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட பி81 போர் விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் ஆகியவை தமிழகத்தில் உள்ள கடற்படை விமானதளங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிலத்தை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னைத் துறைமுகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கடல் பகுதியில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுப்ப தோடு, கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கும் பணியிலும் கடற்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன், ‘ஒக்கி’ மற்றும் ‘கஜா’ புயலின்போது மீட்பு பணிகளில் கடற்படை ஈடுபட்டது.
குறிப்பாக, ‘கஜா’ புயல் வீசிய தினத்துக்கு முதல் நாளன்றே கடற்படை மீனவர்களை எச்ச ரித்து அவர்களை கடலுக்குள் செல்லாமல் காப்பாற்றியது. ‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கப்பல்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட் டன. கடலில் மீனவர்கள் பாது காப்பான முறையில் மீன்பிடிக்கத் தேவையான சூழ்நிலையை ஏற் படுத்த கடற்படை உதவி வருகிறது.
கள்ள நோட்டுகள் தடுப்பு
2019-ம் ஆண்டு மே மாதம் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது, சர்வதேச கடத்தல் தடுப்பு, கள்ள நோட்டுகள் தடுப்பு உள்ளிட் டவை தொடர்பாகவும், எல்லை தாண்டிச் செல்லும் நம் மீனவர் களைத் தாக்கக் கூடாது என்றும் இலங்கைக் கடற்படை அதிகாரி களிடம் வலியுறுத்துவோம்.
இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் சீன கப்பல்கள் வருவதை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம். இந்தியக் கடற்படை எந்த எதிரியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இல்லை.
இவ்வாறு பட்னாகர் கூறினார்.