

கரிசல் மண்ணில் கரும்பு விளையாது தமிழகத்தில் தாமரை மலராது என சுப.வீரபாண்டியன் கூற கரிசல் மண்ணை அகற்றி தண்ணீர் ஊற்றி தாமரையை மலர வைப்போம் தமிழிசை சவுந்திரராஜன் மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் உட்பட பெரும்புள்ளிகள், நட்சத்திரங்கள் ஆகியோர் நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட்டர்களால் விமர்சிக்கப்பட்டும் கிண்டலடிக்கப்பட்டும் வரும் காலக்கட்டம் இது. ஆனால் ஒரு வார்த்தை ஒரு கட்சியின் தலைவரை திரும்பத்திரும்ப கிண்டலடிக்கப்படும் வார்த்தையாக மாறுவது அதுகுறித்து கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதும் மீண்டும் மீண்டும் கிண்டலடிக்கப்படுகிறது.
அந்த வார்த்தை ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்பதாகும். இலக்கிய நயத்துடன் எதிரணியினர் விமர்சித்தால் அதற்கு பதிலளிக்கிறேன் என தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை அளிக்கும் பதில் மீண்டும் மீண்டும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கிண்டலடிக்கப்படுகிறது. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்போல் அவர் அதுகுறித்து கவலைப்படாமல் பேசிவருகிறார். இன்று காலையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
சமீபத்தில் கருஞ்சட்டை மாநாடு நடந்தது. அதில் பேசிய சுப. வீரபாண்டியன் கரிசல் மண்ணில் கரும்பு விளையாது, தமிழகத்தில் தாமரை எந்நாளும் மலராது என்று பேசினார். இதற்கு இன்று பதிலளித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்தவிதத்திலும் எதிர்மறையான மத உணர்வுகளை துண்டுவதில்லை. எதிர்கட்சிகள் தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். மதவெறியை தூண்டுவது யார் என்று விவாதிக்க தயார். மதத்தை வைத்து அரசியல் செய்வது யார். ராகுல்காந்தி சொன்னால் மதசார்பற்றது. பாரதீய ஜனதா கட்சி சொன்னால் மதம் சார்ந்ததா? தமிழக மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை கிடையாது.
குறை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதற்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? நல்லதை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். திருவாரூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஸ்டாலின் தெரு தெருவாக சென்றாரா? ஸ்டாலின் தன்னை பாதுகாக்க பேசுகின்றார்.
மக்கள் அவரை நம்பவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு பாரதீய ஜனதா ஆட்சிதான் காரணம். கருஞ்சட்டை மாநாடு போட்டு கரிசல் மண்ணில் தாமரை மலராது என்று கூறுகின்றனர். கரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தண்ணீரை வரவழைத்து தாமரையை வர வைப்போம். கரிசல் மண் என்று கூறிவிட்டு தான் மணலை விற்று உள்ளனர். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் பாரதீய ஜனதா பலம் பெற வேண்டும். அந்த பலத்தை நிச்சயமாக பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.