Published : 11 Dec 2018 12:10 PM
Last Updated : 11 Dec 2018 12:10 PM

இது வெற்றிகரமான தோல்வி; மோடி அலை என்றுமே ஓயாது: தமிழிசை

மோடி அலை என்றும் ஓயாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் 137-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது:

"5 மாநிலத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும் அவற்றை உதறித் தள்ளிவிட்டு மிகப்பெரும் வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெறுவோம். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் எங்களுக்கு தோல்வி அல்ல. கடுமையாக உழைத்த பிரதமர், தேசியத் தலைவர், தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நெருக்கமான போட்டி. இரண்டு மாநிலங்களிலும் வெற்றிகரமான தோல்வி என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. சத்தீஸ்கரில் வேண்டுமானால் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்தது வேறு. அம்மாநில முதல்வர் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருப்பதால் அரசுக்கு எதிரான மனநிலை அங்கு இருந்திருக்கிறது.

கூட்டணி வெற்றி பெறும் என எதிர்க்கட்சிகள் சொல்வது பொய் என்பதை தெலங்கானா நிரூபித்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய கூட்டணி எந்தவிதத்திலும் வெற்றியைத் தராது என்பதை தெலங்கானா நிரூபித்திருக்கிறது. மாநில அளவில் உள்ள பிரச்சினைகளால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தோல்வியை அடைந்துள்ளோம். கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னால், தெலங்கானாவில் முடிவுகள் வேறு மாதிரி வந்திருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றியின் ஆரம்பமாகத்தான் இதனை எடுத்துக்கொள்ள முடியும். இன்று வாக்கு இயந்திரங்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என கொச்சைப்படுத்தினார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் மட்டும் இயந்திரங்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறது. இது மோசமான குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெற்றி பெற்ற போதெல்லாம் பாஜகவுக்கு வாழ்த்து சொல்லாமல், இயந்திரத்திற்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றிலும் மக்களின் தீர்ப்புதான், இயந்திரங்களின் தீர்ப்பு அல்ல. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மக்கள் தேசிய அளவில் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என சொல்கின்றனர்" என தமிழிசை தெரிவித்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அலை என்றும் ஓயாது என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x