டிச. 11-ம் தேதி மத்திய அமைச்சருடன் நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

டிச. 11-ம் தேதி மத்திய அமைச்சருடன் நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு:
தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
Updated on
1 min read

நாடார் சங்க பிரதிநிதிகளுடன் வரும் 11-ம் தேதி டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறான பதிவுகள் இருப்பதாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி இருக்கும்போது பிரச்சினை எழுந்தது. இதனை எதிர்த்து நாடார் சமூகத்தினர் போராட்டம் நடத்தியும், பாடப் புத்தகத்தில் இருந்து தவறான பகுதிகளை நீக்க காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்தியில் பாஜக அரசு அமைந்ததும் நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மதச் சச்சரவுகள், நாடார் சமூகத்தின் ஆடை உடுத்துதல் குறித்தவை நீக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே பிரச்சினைக்காக நாடார் சங்க நிர்வாகிகள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன. பிரச்சினைக்குரிய பகுதிகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகும் போராட்டம் என்பது தேவையற்றது.

சுற்றறிக்கை அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கவும், சர்ச்சைக்குரிய பகுதிகளை அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் அச்சடிக்காமல் இருக்க வலியுறுத்தவும் டெல்லியில் வரும் 11-ம் தேதி நாடார் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க இருக்கிறேன். உண்மைகளை உணர்ந்து போராட்டங்களை நாடார் சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in