Published : 29 Dec 2018 11:05 AM
Last Updated : 29 Dec 2018 11:05 AM

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு- சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றுக- வைகோ வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் 'சமவேலைக்கு - சமஊதியம்' கோரிக்கையை தமிழக அரசும் பள்ளிக்கல்வித் துறையும்நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில்,

''சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், சமவேலைக்கு சம ஊதியம்'  என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இதுவரை 200 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி, கணவன், குழந்தைகள் என குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்காமல், ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்தால்தான் முடிவு எடுக்க முடியும் என்று பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் மிக அலட்சியமாகக் கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

 

2009-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 6 -வது ஊதியக்குழுவில், 31.05.2009 க்கு முன்னர் நியமனம் ஆன இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், ஒரு நாள் கழித்து அதாவது 01.06.2009 க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. இது புதிதாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட ரூ.3,170 குறைவான அடிப்படை ஊதியம் ஆகும்.

ஒரே கல்வித் தகுதி - ஒரே பணி, ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள். இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

 

2016 பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களில் பலரின் உடல்நிலை மோசமானபோது, முதல்வர் ஜெயலலிதா, “ஊதிய முரண்பாடுகள் களையப்படும்” என்று உறுதி அளித்தார்.

 

ஆனால் இந்த நிலை தொடர்ந்து, 7ஆவது ஊதியக் குழு நடைமுறையிலும் வஞ்சிப்பதைக் களைய வேண்டும் என்று கோரி 2018, ஏப்ரல் மாதம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டனர். அப்போதும் 200க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கிய நிலையில், கவலைக்கு இடமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

இடைநிலை ஆசிரியர்களின் இடையறாத அறபோராட்டத்தின் விளைவாக, ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக அரசு ஒரு நபர் ஊதியக் குழுவை அமைத்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக அந்தக் குழு தனது அறிக்கையைத் தரவில்லை. தமிழக அரசும் அது குறித்து கவனத்தில் கொள்ளாமல் இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி வருகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு - சம ஊதியம்’ என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும். சிறப்பான முறையில் இயங்கி வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடைநிலை ஆசிரியர்களை கைவிட்டுவிடக் கூடாது.  ஆசிரியர்களை அறப்போராட்டக் களத்தில் நீடிக்க விடுவது பள்ளிக் கல்வித்துறைக்கு கரும்புள்ளி ஆகிவிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x