

புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ரேஷன் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடை பெற்றது. மத்திய அரசின் நிதியை தற்போது தடுப்பது யார்? என புதுச்சேரி அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் உள்ள ரேஷன்கடைகளில் கடந்த 6 மாதங்களாக இலவச அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, 2 மாதங்களுக்கான 20 கிலோ அரிசியை வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதுவும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, அதிமுக எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் கடந்த வாரம் மறியலில் ஈடுபட்டார். மற்றொரு அதிமுக எம்எல்ஏ அன்பழகன், தனது தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில், ராஜ்பவன் தொகுதியில் உள்ள ரேஷன் கடை களுக்கு பூட்டு போடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி யினர் திங்கள்கிழமை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கி ரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் வைத்தி லிங்கம், தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உட்பட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். ராஜ்பவன் தொகுதியில் உள்ள 3 ரேஷன் கடைகளை காங்கிரஸ் கட்சியினர் பூட்டினர். பின்னர், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். போராட்டத்துக்கு பிறகு, நாராயணசாமி கூறியதாவது:
மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதை புதுச்சேரி அரசு நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாகவே எந்த பொருளும் ரேஷன் கடைகளில் வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கிலோ ரூ.20 விலையில் தரமான அரிசி வாங்கி விநியோகிக்கப்பட்டது. தற்போது, என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இடைத்தரகர்கள் மூலமாக கிலோ ரூ.30 விலையில் தரமற்ற அரிசியை வாங்கி விநியோகித்து வருகின்றனர். ரங்கசாமி தொகுதியில் மட்டும் தரமான அரிசி வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை, எண்ணெய் போன்ற எந்த பொருளும் வழங்கவில்லை.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றும் நிதியை நாராயணசாமி தடுத்து விட்டார் என்றும் பொய் பிரச்சாரம் செய்து மக்களவைத் தேர்தலில் ரங்கசாமி வெற்றி பெற்றார். தற்போது, மத்தியில் அவரது கூட்டணி கட்சியான பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. இப்போதும், அவரால் நிதியை பெற முடியவில்லை என்றால் நிதி வருவதை தடுப்பது யார்? தற்போது வழங்கும் அரிசியை கொள்முதல் செய்ததில் ஏராளமான தில்லு முல்லு நடைபெற்றுள்ளது. அரசின் நிர்வாக திறமையின்மையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட் போட்டதில் ரூ.350 கோடியை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், ஆளும்கட்சி எம்எல்ஏக்களே அரசை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். அரசு ஊழியர், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே, இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.