

திருவொற்றியூரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் பெண் தோழியுடன் உயிரிழந்துள்ளார்.
எண்ணூர், தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பரசு என்ற அப் பாஸ் (22). இவரது தோழி திரு வொற்றியூர் காலடிப்பேட் டையைச் சேர்ந்த அமிருநிசா (20). இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பரசு, அமிருநிசாவை பைக்கில் சென்று வீட்டில் விடுவதற்கு திருவொற்றியூர் நோக்கி அவருடன் சென்று கொண்டு இருந்தார். திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெரு வழியாக வந்த அவர்கள் எண்ணூர் விரைவு சாலையில் திரும்பினர். அப்போது, எண்ணூரிலிருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில், 2 பேரும் உயிரிழந்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். 2 பேரின் சடலங்களையும் மீட்டு அதை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை அடித்து உடைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகக் கூறி அதை தடுத்து நிறுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.