

மதுரை பஸ் நிலையங்களில் உள்ள பழக்கடைகளில் ஒரு கிலோவுக்கு 400 கிராம் வரை எடைமோசடி நடப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிந்தது. தராசு தட்டுகளில் துளைபோட்டு பயணிகளை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்ட 5 கடையினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்களில் எடை குறைவாக பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விற்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. தொழிலாளர் துறை உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் 30 பேர் குழுவினர் சனிக்கிழமை இந்த பஸ் நிலையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். தொழிலாளர் துறை ஊழியர்களே பொதுமக்களைப்போல் பழங்களை பணம் கொடுத்து வாங்கினர்.
அப்போது மறைவில் இருந்த துணை ஆணையர் ஊழியர்கள் வாங்கிய பழங்களை கடைகளில் உள்ள தராசிலும், அலுவலகத்திலிருந்து கொண்டுசென்ற தராசிலும் எடையை சரிபார்த்தனர். அப்போது ஒரு கிலோவுக்கு ரூ.250 கிராம் முதல் 400 கிராம்வரை குறைவாக இருந்தது தெரிந்தது. நுகர்வோர்கள் பழம் வாங்கும்போது தங்களுக்கு எடை கூடுதலாகவே பழங்களை வழங்குவதாக வியாபாரிகள் காட்டிக்கொள்வர். பழங்கள் உள்ள தராசு தட்டுகள் தரையை தட்டும் அளவுக்கு கீழே இறங்கும். இதனால் தங்களுக்கு அதிக எடையில் பழங்கள் வழங்குகின்றனர் என்ற மகிழ்வோடு நுகர்வோர் வாங்கிச்செல்வர்.
அப்படியிருந்தும் 400 கிராம்வரை எப்படி எடை குறைவாக வழங்குகின்றனர் என்பது அதிகாரிகளுக்கே குழப்பமாக இருந்தது. இதை தெரிந்துகொள்ள அதிகாரிகள் தராசை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் தராசு வைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
பிளாஸ்டிக் பெட்டிகளை மேஜைபோல் கவிழ்த்துவைத்து அதன்மேல் தராசுகளை வைத்திருந்தனர். பிளாஸ்டிக் பெட்டியில் ஊசி நுழையும் அளவுக்கு துளையிட்டிருந்தனர். இந்த துளையை ஆய்வு செய்தபோது, உள்ளே ஒரு நூலில் 400 கிராம்வரை எடையுள்ள இரும்பு எடை கற்களை கட்டி தொங்கவிட்டிருந்தனர். இந்த நூலை தராசில் பொருட்கள் வைக்கும் தட்டின்கீழ் கட்டி வைத்திருந்தனர்.
இது சாதாரணமாக பார்க்கும்போது நுகர்வோருக்கு தெரியாத வகையில் அமைத்து மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. 600 கிராம் பழத்தை ஒரு கிலோவுக்கும் மேல் இருப்பதாக தராசு மூலமே எடைபோட்டு காட்டி ஏமாற்றியுள்ளனர். இந்த தராசுகள் ஆண்டுதோறும் முறையாக முத்திரையிடப்படாததும் தெரிந்தது. இதேபோல் வண்டிகளில் வைத்து பழம் விற்போரும் மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. இவர்கள் வைத்திருந்த தராசிலேயே 500 கிராம்வரை கூடுதலாக்கி காட்டும் வகையில் தராசினை வடிவமைத்திருந்தனர்.
இங்கு ஒரு கிலோ பழம் வாங்கினால் உண்மையான எடை 500 கிராம்தான் இருக்கும். நடைமேடைகளில் கடை வைத்திருந்தவர்கள் அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்ததும் தராசு, எடைக்கற்ளை மறைத்து வைத்தனர். இதை அதிகாரிகள் கைப்பற்றியதில் முத்திரையிடப்படாதது தெரிந்தது. பயணிகளின் அவசரநிலையை பயன்படுத்தி வியாபாரிகள் பலர் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிந்தது.
அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்ததும் மற்ற பகுதிகளில் இருந்த வியாபாரிகளுக்கு போன் மூலம் தகவல் அளித்துவிட்டனர். இதனால் 54 கடைகளில் சோதனை நடந்தபோதும் முதலில் சோதனை நடத்திய 5 கடைகள் மட்டுமே சிக்கின.
இதுபோன்று எடை குறைவாக விற்கப்படுவது தெரிந்தால் 0452 2604388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என உதவி ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.