Published : 25 Dec 2018 10:28 AM
Last Updated : 25 Dec 2018 10:28 AM

திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் கொலை: பின்னணி என்ன?

திருப்பூரில் பட்டப் பகலில் ஜோதிடர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ரகு என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதி புதூரை சேர்ந்தவர் ஜோதிடர் ஜே.ரமேஷ் (எ) குமார் (35). இவர், திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து, கிளி ஜோதிடம் பார்த்து வருவது வழக்கம்.

பூங்கா முன்பு அமர்ந்து நேற்று ஜோதிடம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த நபர், ரமேஷிடம் ஏதோ பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து புறப்பட்டு பென்னி வணிக வளாக சாலையில், தான் வழக்கமாக உணவருந்தும் உணவகத்தை நோக்கி ரமேஷ் சென்றுள்ளார். அந்த நபரும் பின்னால் வாக்குவாதம் செய்தவாறே சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார் அந்த நபர். அரிவாளால் வெட்டியபோது கீழே சரிந்து விழுந்த பிறகும், 12 முறை ரமேஷின் உடலில் அந்த நபர் வெட்டினார். அதற்கு பிறகு, ரமேஷை திட்டியவாறு சில துண்டு பிரசுரங்களை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கண்காணிப்பு கேமரா பதிவு

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மாநகரக் காவல் துணை ஆணையர் உமா, உதவி ஆணையர் அண்ணா துரை மற்றும் வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

கொலையாளி வீசியெறிந்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் கைகளுக்கு கிடைக்காதவாறு, அனைத்தையும் போலீஸார் கைப் பற்றினர். பின்னர், அங்கிருந்த தனி யார் நிறுவனங்களில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக ரமேஷின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள் ளனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரகு என்பவரை தேடி வருகின்றனர்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

கொலைக்கான பின்னணி என்ன?

கிளி ஜோதிடரை கொலை செய்த நபர் விட்டுச்சென்ற துண்டு பிரசுரத்தில் ரமேஷின் சுய விவரமும், ஜோதிடம் பார்ப்பதாக பெண்களை வசியப்படுத்தி தவறான வழிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன்னுடன் 9 ஆண்டுகளாக வசித்து வந்த போயம்பாளையத்தைச் சேர்ந்த பெண் காணாமல் போனதற்கு ரமேஷ்தான் காரணம். இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்புள்ளது. போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரி மற்றும் கூறப்பட்டிருந்த பெண்ணின் முகவரியை தொடக்கப் புள்ளியாக வைத்து விசாரணையைத் தொடங்கிய போலீஸாருக்கு, பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜி.ரகு, திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 2016-ம் ஆண்டு ரமேஷை சந்தித்து, தன்னை பிரிந்து சென்ற பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, ரூ.2 ஆயிரம் பணத்தையும் கொடுத்துள்ளார்.

ஆனால், உண்மையில் மாந்திரீகம் குறித்து தெரியாத ரமேஷ், கண்டுபிடித்து தருவதாகக் கூறி நாட்களை கடத்தி வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ரகு, 2017-ம் ஆண்டு நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக மங்கலம் காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் ரகுவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சில நாட்கள் அமைதியாக இருந்த ரகு, மீண்டும் ரமேஷை பின்தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ரகு, சம்பந்தப்பட்ட பெண் காணாமல் போனதற்கு ரமேஷ்தான் காரணம் என்று நம்பத் தொடங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ரமேஷுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x