

டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக தளர்த்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதைப் பயன்படுத்தி டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்திருக்கிறார்.
அதாவது டீசல் மானியத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த யோசனை தவறானது மட்டுமின்றி, ஆபத்தானதும் ஆகும்.
டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை அகற்ற முந்தைய அரசு முயன்ற போதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனாலும், டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, மாதத்திற்கு 50 காசு விலை உயர்த்தும் திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு மிகவும் தந்திரமாக அறிமுகப்படுத்தியது. அதன்பின் கடந்த 20 மாதங்களில் டீசல் விலை சுமார் 13 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு வெறும் 8 காசுகளாக குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை சரிவு தொடரும் என்பதால் இம்மாத இறுதியில் டீசல் விலை ஓரளவாவது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்; டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ள யோசனை கிராமப்புற பொருளாதாரத்தை குழி தோண்டி புதைத்து விடும்.
டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு கடந்த 20 மாதங்களில் படிப்படியாக ரத்து செய்து விட்டது. இப்போதைய நிலையில் டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை தளர்த்தினாலும், அதனால் டீசல் விலை உயராது. இதனால் மக்களிடம் எதிர்ப்பு எழாது என்பதால் விலைக்கட்டுப்பாட்டைத் தளர்த்தி விடலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் கூறுவது மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் உடமைகளை பறித்துக் கொள்ளலாம் என கூறுவது எவ்வளவு கொடுமையானதோ, அதைவிட கொடுமையான யோசனையாகும்.
டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு இப்போது நீக்கப்படும் பட்சத்தில் உடனடியாக விலை உயர்வு இருக்காது என்றாலும், எப்போதெல்லாம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவில் டீசல் விலை விஷம் போல உயரும். 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இப்போது வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் தொடர்வண்டிக் கட்டணம் இருமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. தனியார் ஆம்னி பேருந்து கட்டணங்களும், சரக்குந்து வாடகையும் பலமுறை உயர்த்தப்பட்டுள்ளன.
ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய சூழலில் டீசல் விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அதனால் டீசல் விலை மீண்டும் உயரும் பட்சத்தில் இந்தக் கட்டணங்கள் மீண்டும், மீண்டும் உயர்த்தப்படும்.
அதுமட்டுமின்றி, பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.
எனவே, டீசல் விலை தொடர்பான ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனின் யோசனையை மத்திய அரசு ஏற்கக் கூடாது. டீசல் விலை இதற்கு மேல் உயராமல் பார்த்துக் கொள்வதுடன், கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அதன் பயனை மக்களுக்கு அளிக்கும் வகையிலான கொள்கையை அரசு கடைபிடிக்க வேண்டும்; அதன்மூலம் மக்களின் சுமையை ஓரளவாவது குறைக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.