மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு வீழ்த்தியுள்ளனர்: மார்க்சிஸ்ட்

மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு வீழ்த்தியுள்ளனர்: மார்க்சிஸ்ட்
Updated on
1 min read

பிரதமர் மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியுள்ளனர் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பாஜக இருக்கும் இடமே தெரியவில்லை. இம்மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இந்த பெருத்த அடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இந்த மாநிலங்களில் மக்களிடையே மதவெறிப் பிரச்சினைகளை முன்வைத்து, சமூகத்தைப் பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடிய சங் பரிவாரத்தின் சதிகளை மக்கள் அடையாளம் கண்டு முறியடித்துள்ளனர்.

அதேபோன்று கடும் விவசாய நெருக்கடி, சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான பாஜக அரசுகளுக்கு எதிராக மக்கள் ஆவேசத்துடன் தீர்ப்பளித்துள்ளனர். மக்களை ஏமாற்றிட வாக்குறுதிகள் கொடுத்து வாய்ப்பந்தல் போட்ட மோடி உள்ளிட்ட பாஜகவினரின் ஏமாற்று வித்தைகளை அடையாளம் கண்டு பாஜகவை வீழ்த்தியுள்ளனர்.

நாடு முழுவதும் பாசிச வெறிபிடித்த ஆர்எஸ்எஸ், பாஜகவினை எதிர்த்துப் போராடி வரும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிக்கும் என்பது உறுதி. இந்த தேர்தல் முடிவுகளின் வாயிலாக ஆட்சி  மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு, தனது வாழ்த்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது" என, பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in