கவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்: காவல்துறை நடவடிக்கை கோரி மாணவர் வழக்கு

கவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்: காவல்துறை நடவடிக்கை கோரி மாணவர் வழக்கு
Updated on
1 min read

பிரபல ஊடகங்களில் கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஏமாற்றும் சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியுள்ளதாவது:

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனம் படித்தவுடன் வேலை நிச்சயம் என்றும், வெளிநாட்டில் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் முடியும் என்று கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை பிரபலமான தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு வருகிறது.

இந்த விளம்பரங்களை நம்பி பல கிராமப்புற ஏழை மாணவர்கள் அந்த நிறுவ னத்தில் சேர்ந்துள்ளனர். நானும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, அந்நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என எண்ணி அவர்களை அணுகினேன்.

ஆனால் விரிவாக விசாரித்த போது அந்த தனியார் நிறுவனம் கல்லூரிக்கான எந்த தகுதியும் இல்லாதது என்பதும், உரிய அங்கீகாரம் இல்லாத நிறுவனம் என்பதும், இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள எந்த பல்கலைக்கழகத்துடனும் அந்த கல்வி நிறுவனத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவர் களை ஏமாற்றி வரும் அந்த தனியார் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அந்த நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அந்த மாணவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களின் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரையறை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அந்த வழிகாட்டுதலின்படி மனுதாரர் அளித்துள்ள இந்தப் புகாரின் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in