ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு: வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு: வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. அதன் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும்  போது முறையாக தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில்  கொட்டியுள்ளனர்.

அதே போல் இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புகார் அளித்தால், மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால், அவர்கள் அதில் கவனம் செலுத்தத் தயங்குகின்றனர். ஆகவே, மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (திங்கள்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in