Published : 26 Dec 2018 02:14 PM
Last Updated : 26 Dec 2018 02:14 PM

அநீதியிலிருந்து மீண்டு வருவோரே சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள்! - இயக்குநர் ராஜுமுருகன் நம்பிக்கை

அநீதியிலிருந்து மீண்டு வருபவர்களே சரித்திரமாகிறார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியின் வாசக முற்றமும்,  வம்சி புக்ஸ் நிறுவனமும் இணைந்து, எழுத்தாளர் கே.வி.சைலஜா எழுதிய ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் வெளியீட்டு விழாவை நடத்தின. இதில், நடிகர் சிவக்குமார், திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், மருத்துவர் பாஸ்கரன் ஜெயராமன், ஆசிரியை முத்தரசி, எழுத்தாளர் பவா செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நூல், மருத்துவ சேவையாற்றி வரும் சாந்தி மெடிக்கல் இன்ஃபர்மேஷனின் நிறுவனர் உமா பிரேமனைக் குறித்தது. மலையாளத்தில் ஷாபு கிளித்தட்டில் எழுதிய நூலை, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் கே.வி.சைலஜா.

அன்னை தெரசாவின் ஆசி

நடிகர் சிவக்குமார் பேசும்போது, “ தன் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து மீண்டு, பிறரின் வாழ்வை இனிதாக்கியவர் உமா பிரேமன். தனது 8 வயதில் இருந்தே தன் குடும்ப சூழ்நிலைகளால், அவமானங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்தவர்.

தன் தாயின் கட்டாயத்தால்,  ஏற்கெனவே இரண்டு திருமணங்களான வயது முதிர்ந்தவருக்கு, 19 வயதில் மூன்றாவது மனைவியானார். இன்பமென ஒன்றில்லாத துயர் படிந்த திருமண வாழ்க்கை. கணவர் நோயில்  படுத்திருக்கும்போது, மருத்துவமனையில் அவருக்கு பணி விடைகள் செய்தார். கணவர் இறந்த பிறகு, அவர் உமாவுக்கு கொடுத்த சொத்துகளை, மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துவிட்டார்.

உமா தன் பள்ளிக் காலத்திலேயே, தன் வாழ்வை சமூக சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர். அந்த லட்சியத்துக்காக அன்னை தெரசாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். அன்னை தெரசாவின் அழைப்பின்பேரில் கொல்கத்தாவுக்கு சென்றார். தன் வாழ்நாளெல்லாம் தங்களுடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதை தெரிவித்தார்.

“உன்னைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர்,  உன் கருணைப் பார்வைக்காக காத்திருக்கிறார்கள். நீ இருக்கும் இடத்திலேயே சேவை செய்ய முடியும். அதற்கு, நீ முதலில் முறையான கல்வி பயில வேண்டும்” என்று கூறி  சிறுமி உமாவை திருப்பி அனுப்பிவிட்டார் அன்னை தெரசா.

பிளஸ் 2 மட்டுமே முடித்திருந்த உமாபிரேமன்,  தன் 25-வது வயதில் மருத்துவ சேவை செய்ய,  புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியா முழுவதும்  பயணித்து, மருத்துவத் தொழில்நுட்பங்கள், வசதிகள், நோய்களுக்குரிய சிகிச்சை முறைகளைக் குறிப்பெடுத்துக் கொண்ட பின்னர், ‘சாந்தி மெடிக்கல் இன்ஃபர்மேஷன் சென்டர்’ ஆரம்பித்து, மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.

கிட்னி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, தன்னுடைய ஒரு கிட்னியை தானமாகக்  கொடுத்துள்ளார். இதுவரை, உமா பிரேமனின் மருத்துவச் சேவை மூலம சுமார் 680 நோயாளிகளுக்கு கிட்னி மாற்று அறுவைசிகிச்சை, 20,500-க்கும் மேற்பட்ட இதய அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.தன் வாழ்வில் முன் பாதி மிக வருத்தத்துக்குரியதாக இருந்தாலும், பின் பாதியை சமூகத்துக்காக அர்ப்பணித்து, அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டவர்” என்று பாராட்டினார். 

திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன் பேசும் போது, “இது மிக முக்கியமான புத்தகம்.நம்முடைய அம்மா, மனைவி, சகோதரிகளிடத்தில் என,  அனைவரிடமும் ஒரு உமா பிரேமன் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பெண்கள் மீது தொடர்ந்து கொலைகளும், வன்கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.  தனக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து யார் மீண்டு வருகிறார்களோ, அவர்களே புத்தகமாகி சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். 

ஜிப்சி படத்துக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. காஷ்மீர் சென்றபோது, வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபா இருந்த பகுதிக்குச் சென்றேன். ஆசிஃபா நாடோடி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். அவர்களிடம் பேசும்போது, ‘சிறுமி ஆசிஃபா கொல்லப்பட்டது ஒரு சம்பவம்.

ஆனால்,  அதற்கும் முன்னரே அந்த சமூகத்தின் பெண்கள் மீது தொடர்ந்து வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம்,  செழிப்பு மிக்க அவர்களின் பூர்வீக நிலம். அந்த நிலத்தில் இருந்து அந்த சமூகத்தினரை அகற்றி,  அதை ஆக்கிரமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த வன்முறைகள்’ என்றனர்.

ஒரு யுத்தம், கலவரம் எதுவாகினும், ஆணின் ஆணவத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்ட பெண்களையே குறிவைக்கிறார்கள்.  படப்பிடிப்புக்காக அகமதாபாத் சென்றபோது, ஒரு மதக் கலவரத்தில் ஐந்து நபர்களால் வன்கொடுமைக்கு உள்ளான சுல்தானா என்ற பெண்ணைச் சந்தித்தேன். வன்கொடுமை செய்த ஐவரும் சுல்தானா வசிக்கும் அடுத்த தெருவிலும், பக்கத்து ஊரிலும் வசிப்பவர்களே.

இவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தந்துவிட்டார். தண்டனைக் காலம் முடிந்து, அவர்கள் வெளியே வந்து விட்டனர். ‘சுல்தானா, நீங்கள் தினம் தினம் இவர்களின் முகங்களைப்  பார்க்க நேரிடும். எப்படி இவர்களைக் கடந்து போகிறீர்கள்’ என்று கேட்டேன். கலவரத்தால் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கான அறக்கட்டளை நடத்துகிறார் சுல்தானா.  

வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களின் 144 வழக்குகளை எடுத்து நடத்தி வருகிறார் சுல்தானா. ‘இதுவே, அந்த ஐவருக்கும் நான் கொடுக்கும் பதிலடி’ என்று எனக்கு பதில் அளித்தார். வன்கொடுமைக்கு ஆளாகும் எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். விரக்தியடைந்து,  எங்கேயோ ஒடி ஒளிந்துள்ளார்கள். ஆனால்,  அதிலிருந்து ஒரு பெண் எழுந்து நீதியைக்  கேட்கும் போது,  அவர்களால் சமூக மாற்றத்தை உண்டாக்க முடிகிறது.

தனக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து பெண்கள் மீண்டு எழுந்துவர வேண்டும். ‘அன்பு உன் வீட்டில் இருந்து தொடங்குகிறது’ என்று அன்னை தெரசா கூறியது போல, நம் வீட்டில் உள்ளவர்களிடம் அன்பு செலுத்துவது மட்டுமின்றி, பக்கத்து  வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்தி, இந்த மானுடம் முழுவதும் அன்பு பரவ வேண்டும் என்பதே விருப்பம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அன்பே ஆயுதம்...

இறுதியாக ஏற்புரையாற்றிய  உமா பிரேமன் “என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் துயர்மிக்கவை. என்னைச் சுற்றிலுமிருந்தவர்கள் என்னைத் துன்புறுத்தியபோது, நான் பதிலுக்கு அன்பை நீட்டினேன். அன்பு ஒன்றுதான் என் ஆயுதம். குழந்தைகளுக்கு அன்பைச் சொல்லிக்கொடுங்கள். பகிர்வதன் மேன்மையை கற்றுக்கொடுங்கள். உடல் உறுப்புகளை தானம் செய்வதன் அவசியத்தை உணரச் செய்யுங்கள்.

நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே எனது கிட்னியை தானம் செய்தவள். உடல் தானத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள்” என்றார்  உருக்கமுடன். இந்த நிகழ்வை, இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்களின் வழியாக தொகுத்து வழங்கினார் எழுத்தாளர் பவா செல்லத்துரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x