தாம்பரத்தில் பிரபல ரவுடி குத்திக்கொலை: கோணியில் கட்டி உடலைப் புதைக்க முயன்ற கொலையாளிகள் கைது

தாம்பரத்தில் பிரபல ரவுடி குத்திக்கொலை: கோணியில் கட்டி உடலைப் புதைக்க முயன்ற கொலையாளிகள் கைது
Updated on
1 min read

சென்னை தாம்பரம் மெப்ஸ் பகுதியில் பிரபல ரவுடியைக் கூட்டாளிகள் குத்திக் கொன்றனர். உடலை மறைக்க கோணிப் பையில் கட்டிப் புதைக்க முயலும்போது தகவலறிந்து சென்ற போலீஸார் கொலையாளிகள் இருவரைக் கைது செய்தனர்.

தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (39). பிரபல ரவுடி. ஒரு காலத்தில் பங்க் குமார் குரூப்புக்கு சவாலாக விளங்கியவர். பல கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட அமல்ராஜ் பல முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

கொலை, கொலை முயற்சி என வெளியிடங்களுக்குச் சென்று ஈடுபட்டதால் தாம்பரத்தில் அமல்ராஜ் ரவுடியாக மிகப் பிரபலம். வயது முதிர்வு காரணமாக சமீபகாலமாக ஒதுங்கியிருந்த அமல்ராஜ் ரங்கநாதபுரத்தை ஒட்டி அமைந்துள்ள ஏரிக்கரை பகுதியில் ஒரு வீட்டில் தங்குவதுண்டு. இங்குதான் அமல்ராஜும் அவரது கூட்டாளிகளும் மது அருந்துவது, சீட்டாடுவது என பொழுதுபோக்குவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மாலை ஏரிக்கரை பகுதியில் உள்ள அந்த வீட்டிலிருந்த அமல்ராஜின் கூட்டாளிகளான பிரபல ரவுடிகள் வேலு, ரமேஷ் உள்ளிட்டோருக்கும் அமல்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அமல்ராஜை குத்திக்கொலை செய்த அவர்கள் ஒரு கோணிப்பையில் அமல்ராஜின் உடலைக் கட்டி ஏரிக்கரை பகுதியில் மறைவான ஒரு இடத்தில் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனடியாக அங்குவந்த போலீஸார் அமல்ராஜின் உடலைப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேலுவையும், ரமேஷையும் மடக்கிப் பிடித்தனர். இன்னொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அமல்ராஜின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமல்ராஜை அவரது கூட்டாளிகள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த ரங்கநாதபுரம் ஏரிக்கரை பகுதி சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் என்பதால் போலீஸார் அங்கு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என அருகிலுள்ள மெப்ஸ் பகுதியில் வேலை செய்வோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in