Published : 31 Dec 2018 05:30 PM
Last Updated : 31 Dec 2018 05:30 PM

நாளை முதல் துணிப்பை; இன்றோடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்: முழு விவரம்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருவதால் நாளை முதல் கேரிபேக் இல்லை, வெளியே செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாம்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு கேடு, பொதுமக்கள் உடல்நலம் பாதிப்பு, நீர்நிலைகள், விலங்குகளுக்கு பாதிப்பு என்பதாலும் மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாத அளவிலும், மக்காத நிலையிலும் உள்ளதாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வந்தது.

பல மாநிலங்களில் அது தடைசெய்யப்பட்ட முன்னுதாரணமும் உண்டு என்கிற நிலையில் அவற்றைத் தடை செய்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதற்கான அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கொடி தடை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களின் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

நாளைமுதல் இவை அமலுக்கு வரும் நிலையில் இதை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்களின் சில கோரிக்கைகளுக்கு மட்டும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை அமலாக உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு இனி கேரிபேக் இல்லை என்பதால் பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றைப் பறிமுதல் செய்யப்படும். தண்டனையும் உண்டு.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்கள், வாழை இலை,  பாக்கு மட்டை,  அலுமினியம் பூசப்பட்ட காகிதம்,  காகித உருளைகள், தாமரை இலை, மூங்கில்  பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம் , சணல் பைகள், செராமிக் பொருட்கள்,  களி மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் , காகிதம், துணியினால் தேசியக் கொடி ஆகியவற்றை மாற்றுப்பொருளாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x