

தமிழகத்தின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது என அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, எஸ்.வெள்ளாகுளம் ஆகிய கிராமங்களில் நடந்த குறைதீர் கூட்டங்களில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
22 மாதங்களில் தமிழகத்தில் பல சாதனைகளை முதல்வர் கே.பழனிசாமி படைத்துள்ளார். காவிரி, பெரியாறு, மேகேதாட்டு அணை, ஸ்டெர்லைட் என பல பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பாதிக்காத வகையில், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்பச் செயல்படுகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டுவந்தார். முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் நடக்கும் முன்னரே ரூ.14 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய 16 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இப்படி திட்டங்களை வாரி வழங்குவதால், தமிழகத்தின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ் டாலினின் முதல்வர் கனவு நனவாகாது தமிழக அரசு மீது தேடிப்பிடித்து குறை கூற முயற்சிக்கிறார். ஆனால், குறைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்த நேரம், காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி உருவாகப்போவதாக தகவல் வருகிறது. தமிழகத்தின் நலனுக்காகவே பணியாற்றும் அதிமுகவை மக்கள் எந்தச் சூழலிலும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.