நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் அரசு பள்ளியில் அமலுக்கு வராத தொழிற்கல்வி பயிற்சி திட்டம்

நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் அரசு பள்ளியில் அமலுக்கு வராத தொழிற்கல்வி பயிற்சி திட்டம்
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் தொழிற் கல்வி பயிற்சி அளிக்க அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களாகியும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தொழிற்கல்விக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் ஒருங்கிணைந்த திட்டத்தின் (சமகிர சிக் ஷா) மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முடிவானது.

இதன்மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அறிவை வளர்ப்பதுடன், சுயதொழில் வாய்ப்பையும் அதிகரிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

அதில் 67 பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வி பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது. இதையடுத்து அந்த பள்ளிகளிலும் தலா 70 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டது. விவசாயம், ஆட்டோ மொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக், ஹார்டுவேர், சுகாதாரம், சுற்றுலா, அழகு பயிற்சி உட்பட பல தொழில் பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

வாரத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த ஆண்டு முதலே பயிற்சி தொடங்கப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து தேர்வான பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அதில் அந்தந்த மாவட்டத்தின் பிரதான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

திடீரென இதற்கான திட்டப்பணிகள் மந்தமாகின. போதுமான நிதி ஓதுக்கீடு இல்லாததால்  கல்வி ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்த நிலையிலும் தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் கல்வித்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதால் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. பயிற்சி வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

சில மாற்றங்களுடன் விரைவில் திட்டம் தொடங்கப்படும். பயிற்சி அளிக்க சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மற்ற பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றனர்.

- சி.பிரதாப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in